மீண்டும் வாடிவாசல் தள்ளிப்போவது ஏன்? – வியப்பூட்டும் புதிய தகவல்

நடிகர் சூர்யா இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் பல நாட்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இப்படத்துக்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் விடுதலை இரண்டாம்பாகம் படம் வெளியாகிவிட்டதால் வெற்றிமாறன் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்துக்கு அடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்கிறார் என்று சொல்லப்படுகிறது.
வாடிவாசல் என்னாச்சு?
நேற்று, சென்னையில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் வாடிவாசல் தயாரிப்பாளர் தாணு. இவருடன் இயக்குநர் வெற்றிமாறனும் மேடையில் இருந்தார். இருவரிடமும் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தயாரிப்பாளர் தாணு, “2 நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் ஒரு ட்யூன் அனுப்பிவைத்தார். அதை இப்போது பாடினாலும் வைரலாகிவிடும். சமீபத்தில் சூர்யாவை சந்தித்து 4 மணிநேரம் பேசிவிட்டு, பின்பு இப்பாடலை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். அவரது உழைப்பு நெகிழ வைக்கிறது, மகிழ வைக்கிறது. திரையுலகிற்கு கிடைத்த பெரிய கற்பக விருட்சம் தம்பி வெற்றிமாறன் என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் இவ்வாறு நம்பிக்கையாகப் பேசுகிறார்.அதேசமயம், அடுத்ததாக வாடிவாசல் தொடங்காது எனும் நிலை இருக்கிறது.ஏன் இப்படி?
வாடிவாசல் படத்தைப் பொறுத்தவரை, ஐந்தாண்டுகளுக்கு முன்பு அதாவது, சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.
அதன்பின்,2021 ஆம் ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அதன்பின் 2021 ஜூலை 16 அன்று ‘வாடிவாசல்’ படத்தின் தலைப்பு வடிவமைப்பை வெளியிட்டது படக்குழு.
இப்படி ஐந்தாண்டுகளாகக் காத்துக் கிடக்கும் வாடிவாசலைத் தொடங்காமல் தெலுங்கு இயக்குநரின் படத்துக்கு சூர்யா போவது ஏன்?
இதுகுறித்து விசாரித்தால்,
வாடிவாசல் படத்தின் முழுமையான திரைக்கதை வடிவத்தை (பவுண்டட் ஸ்கிரிப்ட்) கொடுங்கள்.அதன்பின் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று சூர்யா சொல்லிவிட்டாராம்.ஆனால் இதுவரை வெற்றிமாறன் அதை உருவாக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் குறுநாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் என்று சொல்லப்பட்டது.அப்படி இருந்தும் படம் அறிவித்து ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் முழுமையான திரைக்கதை வடிவம் உருவாக்கவில்லை என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது.
இவரை நம்பி இன்னமும் தொடங்காத இந்தப் படத்துக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தான் பாவம் என்று திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.