கட்டுரைகள்

வாடிவாசல் கைவிடப்பட்டது ஏன்? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட படம் வாடிவாசல்.ஜனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.இது ஒரு நாவலின் கதையைக் கொண்டு உருவாகும் என்று சொல்லப்பட்டது.

வாடிவாசல் என்ற நாவல் பிரபல எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியது. மதுரையைச் சேர்ந்த சி.சு.செல்லப்பா பல்வேறு நாளிதழ்களில் பணிபுரிந்திருக்கிறார். அதோடு, ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மாவட்டமான மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தழுவி எழுதிய ‘வாடிவாசல்’ என்ற குறுநாவல் 1959 இல் வெளியானது.

சூர்யாவின் 40 ஆவது படமாகத் தயாராகும் என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி என்று அறிவிக்கப்பட்டது.

இதன் கதை…

பிச்சி மற்றும் மருதன் என்ற இருவர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதைப் பற்றிய கதையாகும். பிச்சியின் தகப்பனான அம்புலி சிறந்த மாடுபிடி வீரராக இருப்பார். யாராலும் அடக்கமுடியாத காளி என்ற ஜமீன் வீட்டு காளையைப் பிடிக்கப்போய் இறந்துவிடுவார் அம்புலி.

அம்புலி இறக்கும் முன் காளியை எப்படியாவது அடக்கி விடவேண்டும் என்று சொல்கிறார். அப்பாவின் கோரிக்கையை பிச்சி நிறைவேற்றினாரா இல்லையா என்பது தான் மீதிக் கதை.

ஜனவரியில் வெற்றிமாறன் சொன்னதை ஜூலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே முதல்பார்வையுடன் வெளியிட்டனர்.

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ஜூலை 23,2020 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.சூர்யா முகத்துடன் கூடிய அந்த முதல்பார்வை அவருடைய இரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதன்பின், ஜூலை 16,2021 அன்று ‘வாடிவாசல்’ படத்தின் தலைப்பு வடிவமைப்பை வெளியிட்டது படக்குழு.

ஏறுதழுவலின் போது திமிறி வரும் காளையுடன் அவற்றின் கொம்புகளை எழுத்துகளின் மேல் வைத்து தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த வடிவமைப்பு அமைந்திருந்தது.

இவற்றிற்குப் பின், 2022 மார்ச் மாதத்தில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.அது டெஸ்ட் ஷூட் என்று சொன்னார்கள்.

அதன்பின், ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை வாங்கி அதனுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்கிறார் என்று காணொலி வெளியிட்டார்கள்.பாலாவின் வணங்கானில் முதலில் சூர்யா நடித்தார்.அதன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தபோது அங்கும் அந்தக் காளையை அழைத்துச் சென்று அதனுடன் சூர்யா பயிற்சி செய்துகொண்டிருந்தார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், அப்போது திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காததால் அந்தக் காளையை வைத்துப் படப்பிடிப்பு நடத்த முடியாது எனும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அதனால் ஒரு உயிருள்ள காளை போலவே செயற்கை காளையொன்றை சுமார் ஒரு கோடி செலவில் உருவாக்கி அதை பல இலட்சம் செலவு செய்து பாதுகாத்து வந்தார்கள்.

2023 மே மாதத்தில், வாடிவாசல் படத்துக்காக இலண்டன் சென்று கணினி வரைகலைக் காட்சிகளை வடிவமைக்கும் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்திவிட்டு வந்தார் வெற்றிமாறன்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, மார்ச் 9,2025, சென்னையில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் வாடிவாசல் தயாரிப்பாளர் தாணு. அவருடன் இயக்குநர் வெற்றிமாறனும் மேடையில் இருந்தார். இருவரிடமும் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, தயாரிப்பாளர் தாணு, “2 நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் ஒரு ட்யூன் அனுப்பிவைத்தார். அதை இப்போது பாடினாலும் வைரலாகிவிடும். சமீபத்தில் சூர்யாவை சந்தித்து 4 மணிநேரம் பேசிவிட்டு, பின்பு இப்பாடலை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். அவரது உழைப்பு நெகிழ வைக்கிறது, மகிழ வைக்கிறது. திரையுலகிற்கு கிடைத்த பெரிய கற்பக விருட்சம் தம்பி வெற்றிமாறன் என்று தெரிவித்தார்.

இதனால் அடுத்து வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று எல்லோரும் நம்பினார்கள்.

ஆனால் எல்லோரும் ஆச்சரியுமடையும் விதமாக சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.அதோடு ஜூன் 11 அன்று அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இதனால் இவ்வளவு நாட்கள் சந்தேகமாகப் பேசப்பட்ட செய்தி இப்போது உறுதியாகிவிட்டதாகத் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆம், வாடிவாசல் படம் கைவிடப்பட்டுவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

ஏன்? என்னாச்சு? அந்தப்படத்துக்கான முன் தயாரிப்புச் செலவுகளே பல கோடி ஆகிவிட்ட நிலையில்,வெற்றி மாறன், சூர்யா,ஜீ.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் பெரும் உழைப்பைக் கொடுத்திருந்த நிலையில் படம் கைவிடப்பட்டது ஏன்?ஐந்தாண்டுகளாகக் காத்துக் கிடக்கும் வாடிவாசலைத் தொடங்காமல் தெலுங்கு இயக்குநரின் படத்துக்கு சூர்யா போவது ஏன்?

இதுகுறித்து விசாரித்தால்,

இயக்குநர் வெற்றி மாறனுக்கும் சூர்யாவுக்கும் இப்படத்தின் திரைக்கதை விசயத்தில் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.அவர் சொன்ன திரைக்கதை வடிவங்கள் சூர்யாவுக்குத் திருப்தியாக இல்லை என்பதால் பல்வேறு மாற்றங்களைச் சொன்னாராம்.அப்போதும் அது இறுதிவடிவம் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால், வாடிவாசல் படத்தின் முழுமையான திரைக்கதை வடிவத்தை (பவுண்டட் ஸ்கிரிப்ட்) கொடுங்கள்.அதன்பின் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று சூர்யா சொல்லிவிட்டாராம்.ஆனால் இதுவரை வெற்றிமாறன் அதை உருவாக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அவர் உருவாக்காமல் இருக்கக் காரணம், அப்படி ஒரு பயிற்சியே அவரிடம் இல்லையாம்.எழுதுவது கொஞ்சம், படப்பிடிப்பு நடக்கும்போது கொஞ்சம், குரல்பதிவு நடக்கும் போது கொஞ்சம் படத்தொகுப்பில் கொஞ்சம் என்று அவ்வப்போது தோன்றுவதை வைத்தே காட்சிகளை மெருகேற்றி படத்தை நிறைவு செய்யும் வழக்கமுடையவர் வெற்றிமாறன்.

ஒரு முழுமையான திரைக்கதையை எழுதி அதை அப்படியே படமாக்கும் வழக்கம் அவருக்குக் கிடையாது.அதனால்தான் அவருடைய படங்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பு வெளியீடு ஆகிய எதுவுமே நடக்காது.

அப்படிப்பட்டவரிடம் பவுண்டட் ஸ்கிரிப்ட் எங்கே? எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு? அவை எவ்வெப்போது? என்கிற விவரங்களையெல்லாம் சொல்லுங்கள்.அதன்பின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று சூர்யா கறாராகச் சொல்லிவிட்டாராம்.

அவர் இப்படிக் கேட்கக் காரணம், இந்தப்படம் எப்போது தொடங்கினாலும் சரி, முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும் என்று வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ந்து போன சூர்யா, ஏற்கெனவே சில இயக்குநர்களை நம்பி ஆண்டுக்கணக்கில் நாட்களை வீணடித்தது போதும்.இனிமேல் அப்படி இருக்க முடியாது என்கிற முடிவெடுத்ததுதான் காரணம் என்கிறார்கள்.

அதே சமயம்,இன்னமும் படப்பிடிப்பே தொடங்காத இந்தப்படத்துக்காகப் பல கோடிகளைச் செலவழித்துவிட்டுக் காத்திருக்கும் தயாரிப்பாளர் தாணுவுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற கேள்வி வந்திருக்கிறது.

அதற்கு, பொருத்தமான கதை, படப்பிடிப்பு நாட்கள், வெளியீட்டுத் தேதி ஆகிய எல்லாவற்றையும் முறையாகத் திட்டமிட்டுச் செய்யும் இன்னொரு இயக்குநரைப் பாருங்கள்.அவருடன் இணைந்து உங்கள் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று சூர்யா சொல்லிவிட்டாராம்.

அதனால், இப்போது சூர்யாவுக்காக இயக்குநர் தேடும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது.மலையாளத்தில் ஆவேசம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீத்துமாதவன் இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் படமொன்றைத் தயாரிக்கும் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன என்கிறார்கள்.

வாடிவாசல் படப்பிடிப்பு இப்போது தொடங்கும் என்று பலமுறை சொல்லப்பட்டு அப்போதெல்லாம் நடக்காத போதும், வாடி வாசல் டிராப் என நூறு முறைக்கு மேல் சொல்லப்பட்ட போதும் அசராமல் இருந்தவர் தயாரிப்பாளர் தாணு. அதற்கு, வாடி வாசல் படம் நடந்தால் அவருக்கு அந்த ஒரு படம்தான் இருக்கும் நடக்கவில்லை என்றால் இரண்டு படங்கள் கிடைக்கும். ஒன்றை வெற்றிமாறன் இயக்குவார் இன்னொன்றில் சூர்யா நாயகனாக இருப்பார் என்று சொல்லப்பட்டது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

விரைவில் அந்த இரண்டு படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts