தனிஒருவன் 2 படத்தின் தயாரிப்பாளர் பற்றிக் கூறாதது ஏன்?
தனிஒருவன் படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது.
இதைப்பற்றி இயக்குநர் மோகன்ராஜா கூறும்போது, “தனிஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த தனிஒருவன் 2 மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம். சமூக பின்னணியில் அமைக்கப்படிருக்கும் இந்த தனி ஒருவன் 2 கதையில், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமான முறையில் இருக்குமாறு முயற்சித்து வருகிறோம்” என்றார்.
இப்படத்தைத் தயாரிப்பது யார்? என்பதைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. தனிஒருவன் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கவிருக்கிறதாம்.
அதை அவர் அறிவிக்காதது ஏன்?
தனிஒருவன் படத்தின் படப்பிடிப்பு நாட்களும் பட்ஜெட்டும் திட்டமிட்டதைவிட பல மடங்கு அதிகமாகிவிட்டதாம். அதனால், இப்போது ஒரு பட்ஜெட்டை ஒதுக்கி, முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துத் தரச் சொல்லி இயக்குநர் மோகன்ராஜாவிடம் தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறதாம். இதனால் அதிர்ச்சியடைந்திருக்கிறாராம் இயக்குநர்.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாலேயே தயாரிப்பு நிறுவனம் பற்றி மோகன்ராஜா கூறவில்லை என்கிறார்கள்.











