December 18, 2025
சினிமா செய்திகள்

தமிழகத்தில் வசூலைக் குவிக்கும் தெலுங்குப் படங்கள்

டிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கெதிராக தென்னிந்தியத் திரையுலகம் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற எல்லா மாநிலங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ்த் திரையுலகம் இன்னும் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளவில்லை.

அதேசமயம் திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பிற மொழிப்படங்கள் தமிழகத்தில் திரையிடப் படுகின்றன.

மார்ச் 30 ஆம் தேதி சிரஞ்சீவி மகன் ராம்சரண், சமந்தா ஆகியோர் நடித்த ரங்கஸ்தலம் என்கிற தெலுங்குப் படம் தெலுங்குப்படமாகவே தமிழகத்தில் வெளியானது.

அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே மூன்று கோடி ரூபாய் வசூல் செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அதுமட்டுமா? அடுத்த சில நாட்களில் தெலுங்கு நடிகர் நானியின் புதுப்படம் ஒன்று வெளியாகவிருக்கிறது. அப்படத்தைத் திரையிட கடும்போட்டி நிலவுகிறதாம்.

முன்பெல்லாம் அந்தத் தெலுங்குப் படங்களை சென்னையில் திரையிடுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் கெஞ்சுவார்கள்.

இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. படத்தை எங்கள் திரயரங்குக்குக் கொடுங்கள் நாங்கள் பணம் தருகிறோம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

எப்படியோ தமிழகத்தில் தெலுங்குத் திரையுலகம் வாழ்கிறது.

Related Posts