நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற மிஷ்கின்
விஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.கதாநாயகியை மையப்படுத்தி ஒரு கதையை எழுதியிருக்கிறாராம்.
காவு என்று பெயரிடப்பட்ட அந்தக்கதையில் நடிக்க நயன்தாரா சமந்தா போன்ற முன்னணி நடிகைகளை அணுகியிருக்கிறார். அவர்கள் மறுத்துவிட்டதால் அப்படமும் நடக்கவில்லை.
இந்நிலையில் அடுத்து அவர் எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
அவருடைய இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நாகா, நாயகி பிரயாகா மார்டின் மற்றும் ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பிசாசு. இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவான இப்படம் 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி வெற்றி பெற்றது.
அப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்க மிஷ்கின் திட்டமிட்டாராம். இதற்கு உடனடியாகத் தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
பல படங்களை விநியோகம் செய்தவரும் சில படங்களைத் தயாரித்தவருமான ராக்போர்ட் முருகானந்தம், பிசாசு 2 படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறாராம்.
அதனால் இப்போது மிஷ்கின் பிசாசு 2 பட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.











