95 ஆவது நாளில் டிவிக்கு வரும் ரஜினி படம் – மக்கள் வியப்பு
கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘பேட்ட’. விஜய்சேதுபதி,சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப்படம். நீண்ட காலத்துக்குப் பிறகு இளமைத்துடிப்புடன் ரஜினியைப் பார்க்க முடிந்தது என்ற ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
வசூல்ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு என்று படத்தயாரிப்பு நிறுவனம் சொன்னது.
இப்படம் ஏப்ரல் 14 அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
படம் வெளியாகி 95 ஆவது நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சின்ன படங்கள் அல்லது பெரிய நடிகர்களின் ஓடாத படங்கள்தாம் நூறுநாட்களுக்கு முன்னதாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
ஆனால் இந்தப்படம் வெற்றி என்ற போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
படத்தைத் தயாரித்ததே சன் தொலைக்காட்சி என்பதால் இப்படி என்றும், இனிமேல் எல்லாப்படங்களின் நிலையும் இதுதான், கால மாற்றத்தின் விளைவு என்றும் திரைத்துறையினர் சொல்கிறார்கள்.
ஆனாலும் தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரம் நடித்த படம் நூறு நாட்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது மக்களை ஆச்சரியப்படுத்துகிறது.










