சினிமா செய்திகள்

வீரதீரசூரன் – கடைசிநேரத்தில் விக்ரம் செய்த உதவி

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரதீரசூரன்.விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியிருக்கிறார்.

விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்கிறார்.

இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிடுவதென்றும் முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படம் இன்று காலை ஒன்பது மணிக்கு வெளியாவதாக இருந்தது.

ஆனால், திட்டமிட்டபடி ஒன்பது மனிக்கு வெளியாகாது என்றும் 11 மணி அல்லது 12 மணி அளவில் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

ஏன் இந்த தாமதம்?

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை பிஃபோர்யூ எனும் நிறுவனம் பெற்றிருந்தது.

அதன் மதிப்பு சுமார் ஐம்பது கோடி என்று சொல்லப்படுகிறது.இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான தொகை மட்டும் சுமார் ஏழு கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறதாம்.

இந்தத் தொகையை நாயகன் விக்ரமின் சம்பள பாக்கிக்காக கொடுப்பதாக தயாரிப்பாளர் சொல்லியிருந்தாராம்.ஒரே நேரத்தில் இருவரிடம் இதுகுறித்து உறுதி கொடுத்திருந்ததால் பதட்டமான பிஃபோர்யூ நிறுவனம் நீதிமன்றம் சென்று பட வெளியீட்டுக்கு இடைக்காலத்தடை பெற்றுவிட்டதாம்.

அதனால்தான் பட வெளியீடு தாமதம் என்கிறார்கள்.

இச்சிக்கலில் என்ன முடிவு எட்டப்பட்டது?

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான தொகையால்தான் சிக்கல் என்பதை அறிந்த நாயகன் விக்ரம், உடனடியாகத் தன்னிடம் இருந்த உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

இதனால், வழக்கு தொடர்ந்த நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்துவிட்டது என்றும் அதை இன்று காலை நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் செய்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதனால் 11 மணி அளவில் நீதிமன்ற உத்தரவு வந்துவிடும் என்றும் அது வந்ததும் படம் திரையிடப்படும் என்று சொல்கிறார்கள்.

தயாரிப்பாளருக்கு ஒரு சிக்கல் என்று தெரிந்த அடுத்த கணமே அவருக்கு உதவியாகக் களத்தில் இறங்கி பட வெளியீட்டை உறுதிப்படுத்திய நாயகன் விக்ரமை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts