சினிமா செய்திகள்

துக்ளக் தர்பாருக்கு முன்பாகவே வெளியாகும் விஜய்சேதுபதி படம்

ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், 4 முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்திருக்கிறது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் உள்ள 4 கதைகளை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இவற்றில், விஜய்சேதுபதி உட்பட பல முன்னணியினர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தைத் தொடங்கும்போது, நேரடியாக இணையதளத்தில் வெளீயிடுவதற்காக தயாரிக்கப்படுகிறது என்று சொன்னார்கள்.

ஆனால், இப்போது அந்தப் படத்தைத் திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருக்கிறாராம் ஐசரிகணேஷ்.பிப்ரவரி 12 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.

திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட நயன்தாரா,ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை இணையதளத்தில் வெளீயிட்டார் ஐசரிகணேஷ்.

இப்போது இணையத்துக்கு என்று எடுக்கப்பட்ட படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்.

கெளதம் மேனன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் இருப்பதாலும் விஜய்சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதாலும் படத்தைத் திரையரங்குகளில் வெளீயிடத் திட்டமிடுகிறார்களாம்.

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான துக்ளக் தர்பார் படம்தான் அடுத்து வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்பட்ட நேரத்தில் திடீரென் இப்படம் இடையில் நுழைந்திருக்கிறது என்கிறார்கள்.

Related Posts