சினிமா செய்திகள் நடிகர்

விஷால் எவ்வளவு வட்டி கட்டுகிறாரோ? – விஜய்சேதுபதி வேதனை

ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார், விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான இப்படத்தில் பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம், மகேந்திரன் தேவராஜ், நியாத்தி கடாம்பி, ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷிணி, ஆடுகளம் முருகதாஸ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கலை இயக்குநர் வினோத் ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், உடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீகார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பாளர் அழகிய கூத்தன், பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி,பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் விஜய்சேதுபதி பேசுகையில்,

தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்.

இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறை சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.

அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்தவிரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது.

ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது என்றார்.

அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய்சேதுபதியிடம், விஷால் இந்தப்படத்துக்குத் தடையாக இருந்தது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு,

அவர் நல்ல மனிதர், அவரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை, அவருடைய சூழல் என்னவோ? அவர் எவ்வளவு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறாரோ? இதுபோல அவர் எவ்வளவு விட்டுக்கொடுத்திருக்கிறாரோ? எனவே இதில் அவர் மீது குற்றம் சொல்லமுடியாது. எனக்கு அவர் மீது வருத்தமே வரவில்லை. ஏனெனில் மொத்த அமைப்பும் சரியில்லை எனும்போது ஒருவரை மட்டும் குற்றம் சுமத்த முடியாது என்றார்.

Related Posts