சினிமா செய்திகள்

பொதுமேடையில் திடீர் காதல் அறிவிப்பு – சர்ச்சையில் பிக்பாஸ் ஜோடி

கன்னடத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு நாகரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம்.

அதுபோல் பிரபல கன்னட பின்னணிப் பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவருக்கும் இடையேயும் காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் மைசூரு தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை மைதானத்தில் நேற்று முன்தினம் இளைஞர் தசரா விழா நடந்தது.

இதில் சந்தன்ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டு கோம்பே… கோம்பே என்ற கன்னடப் பாடலைப் பாடினர். சந்தன் ஷெட்டியுடன் நடனக்குழுவினரும் நடனமாடினர்.

இந்தப் பாடல் முடிந்ததும் சந்தன்ஷெட்டி பேசுகையில், நான் நிவேதிதா கவுடாவிடம் ஒன்று சொல்லத் திட்டமிட்டுள்ளேன். அதுவும் இந்த அழகான அரண்மனை மற்றும் வெளிநாட்டினர், கர்நாடக மக்கள் முன்னிலையில் கூற உள்ளேன். இது மிகப்பெரிய மேடை. இங்கு எனது பெற்றோரும், நிவேதிதாவின் பெற்றோரும் வந்துள்ளனர். நானும், நிவேதிதாவும் பிக்பாஸ் இல்லத்தில் 105 நாட்கள் ஒன்றாக இருந்தோம். அந்த நாட்களில் நாங்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொண்டோம். என்னை அவர் அதிகமாக புரிந்துகொண்டார்.

இவ்வாறு பேசிக்கொண்டே, நீங்கள் எனக்கு நிச்சயம் ஒரு தாயாக இருப்பீர்கள் என்று தனது காதலை வெளிப்படுத்தினார். திருமணம் செய்வதாகக் கூறியதுடன், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிறிய நகைப்பெட்டியை எடுத்து, அதில் இருந்த மோதிரத்தை நிவேதிதாவின் கையில் அணிவித்துவிட்டார்.

அவரும் புன்னகை ததும்ப காதலை ஏற்றுக்கொண்டார். இந்த சுவாரசிய நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் எதிர்பார்க்காத அதிர்ச்சி வைத்தியம் என்று கூறப்படுகிறது.

இதனால், உலகப்புகழ்பெற்ற தசரா விழாவை களங்கப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தன்ஷெட்டியும், பாடகி நிவேதிதாவும் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க. மறுபுறம் சந்தன் ஷெட்டி, நிவேதிதா ஆகியோருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சர்க்கிளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே இதுகுறித்து சந்தன் ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், தசரா விழாவுக்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு காதல் விவகாரம். அன்பை வெளிப்படுத்த அது நல்ல நாள். ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும், நிவேதிதாவின் குடும்பத்தினரும் மற்றும் எங்கள் நல விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிவைத்தியம் கொடுப்பதற்காக, இளைஞர் தசரா விழா மேடையில் நான் எனது காதலை வெளிப்படுத்தினேன். ஏற்கனவே எங்கள் இருவரை பற்றியும் ஊடகங்களில் பலவாறாக வதந்திகள் வந்தன. அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அந்த நிகழ்வு நடந்தது. நாங்கள் நீண்ட காலம் காத்திருக்கப்போவதில்லை. வருகிற 2020-ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.

சம்பவம் பற்றி பாடகி நிவேதிதா கவுடா கூறுகையில், தசரா விழாவில் நாங்கள் தவறாக நடக்கவில்லை. ஒரு வேளை அந்த மேடையில் எங்களுக்குத் திருமணம் நடந்திருந்தால் அது தவறு என ஒப்புக்கொண்டிருப்பேன். சந்தன்ஷெட்டி என்னிடம் மேடையில் காதலை வெளிப்படுத்துவார் என்பது தெரியாது. அவர் மோதிரம் மாட்டிவிட்ட போது இது நிஜமா அல்லது கற்பனையா என ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டேன். அவர் எனக்கு மோதிரம் மாட்டிவிட்ட போது அவரது கை நடுங்கியதை உணர்ந்தேன் என்றார்.

Related Posts