சினிமா செய்திகள்

வெள்ளைப் பூக்கள் விழா – விவேக் பேச்சில் விவரப்பிழை

விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 8 அன்று மாலை நடைபெற்றது.

அவ்விழாவில் நாயகன் விவேக் பேசியதாவது….

நாற்பது வருடங்களுக்கு முன்பு ‘உதிரிப்பூக்கள்’ படம் ஒரு ‘டிரென்ட்செட்டராக’ தமிழ்த் திரையுலகுக்கு வந்து, இப்படியும் படம் எடுக்கலாம் என்ற மனநிலையைக் கொண்டுவந்தது.

படைப்புகள் அதன் உன்னதத்தை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கும். அதேபோல ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படம் வரப்போகிறது.

நான் காமெடி படங்களில் நடித்து பல சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறேன். ஆனால் முதன்மையான வேடத்தில் நடித்தாலே ஏதாவது சோதனை வந்து விடுகிறது.

நான் தான் பாலா படம் நடித்தேன். என் சினிமா பயணத்திலேயே மிகச்சிறந்த படம் என நினைத்தேன். ஆனால் அந்தப் படம் வெளிவந்த சமயம் பாபநாசம் படமும் வெளியானது. பாபநாசம் படத்தால் என் படம் நாசமானது.கமல் எல்லாத் திரையரங்குகளையும் எடுத்துக்கொண்டார்.

( விவேக் பேசியதில் விவரப்பிழை இருக்கிறது. நான் தான் பாலா படம் வெளியானது ஜூன் 13, 2014. பாபநாசம் வெளியானது ஜூலை 3, 2015. 2015 இல் வெளியான ஒரு படம் 2014 இல் வெளியான ஒரு படத்துக்கு எப்படி போட்டியாக முடியும்? அதேசமயம், பாபநாசம் வெளியான ஜூலை 3,2015 அன்று விவேக் கதாநாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் என்கிற படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது)

‘வெள்ளைப்பூக்கள்’ படம் நன்றாக வந்திருக்கிறது. ‘விவேக் மாதிரி ஒரு நகைச்சுவை நடிகர் எப்படி பெரிய போலீஸ் அதிகாரியாக நடிக்க முடியும்?’, இதை மக்கள் ஏற்பார்களா? என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளை இயக்குநர் பெருவாரியாக ஈடு செய்திருக்கிறார்.

தற்போது நாட்டில் நடக்கும் சில வேண்டாத அசம்பாவிதங்களைப் பார்த்து மக்கள் கொதிக்கிறார்கள். அந்தக் கோபத்துக்குப் பதில் படத்தில் இருக்கும். ‘இப்படி ஒருத்தன் வரணும்டா’ என்று படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் நினைப்பார்கள்.

இவ்வாறு விவேக் பேசினார்.

விழாவில் நடிகர் சார்லி, இயக்குநர் விவேக் இளங்கோவன், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts