முத்தையாமுரளிதரன் கதையில் நடிக்க விஜயசேதுபதி மறுப்பு?
இலங்கை மட்டைப்பந்தாட்ட அணி வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.
‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று உலகெங்கிலுமிருந்து விஜய்சேதுபதிக்குக் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதற்குக் காரணம், தமிழினப்படுகொலை செய்த இராஜபக்சே குடும்பத்தினரோடு முத்தையா முரளிதரன் நெருக்கமாக இருப்பதும் அவர்களுக்காகத் தேர்தல் பரப்புரை செய்ததும்தான்.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல் இந்தப்படத்தில் நடிப்பதற்காக விஜய்சேதுபதியை, இராஜபக்சே மகன் புகழ்ந்து பேசினார்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி உலககெங்கும் உள்ள தமிழர்கள் இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்குக் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இயக்குநர் சீனுராமசாமியும் வெளிப்படையாகவே இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்குக் கோரிக்கை வைத்தார்.
இவற்றிற்கு விஜய்சேதுபதி எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றாலும் நேற்று வெளியான முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியனவற்றை தன்னுடைய சமூகவலைதளப்பக்கங்களில் அவர் பகிரவில்லை.
இதனால் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அவர் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் அது உண்மையா? என்பது தெரியவரும்.










