சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக.. – சிம்புவின் சோதனை முயற்சி

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.

அந்நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டாலும் சிம்பு சம்பளம் இயக்குநர் சம்பளம் என்று தொடக்கத்திலேயே பெரும் தொகையைச் செலவிடாமல் படப்பிடிப்புக்குண்டான செலவை மட்டும் செய்து படத்தை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.

படம் தயாரான பின்பு படத்தின் வியாபாரம் நடைபெறும். அப்போது படப்பிடிப்புச் செலவைச் செய்த மாதவ் மீடியா நிறுவனம், முதலில் தாங்கள் செலவு செய்த தொகையை எடுத்துக் கொள்ளும். அதன்பின் சிம்பு உள்ளிட்டோர் சம்பளம் கொடுக்கப்படும்.

அதைத்தாண்டி உள்ள இலாபத் தொகையில் சிம்புவுக்கும் ஒரு பங்கு வழங்குவதாக பட நிறுவனம் சொல்லியிருக்கிறதாம்.

இந்தமுறையை சிம்பு ஏற்றுக்கொண்டதால் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடந்து படமும் தொடங்கிவிட்டது.சுசீந்திரன் படத்தை விரைவாக முடித்துவிடுவார் என்பதால் திட்டமிட்டபடி எல்லாம் சுமுகமாக நடக்கும்.

தமிழ்த்திரையுலகில் முதன்முறையாக ஒரு பெரிய கதாநாயகன் இப்படி ஒரு பரீட்சார்த்த முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது வெற்றி பெற்றால் சிம்புவுக்கு மட்டுமல்ல தமிழ்த்திரையுலகுக்கே நல்லது என்கிறார்கள்.

Related Posts