சினிமா செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி – ஜகமே தந்திரம் வெளியீட்டுத்தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகளும் நிறைவடைந்து வெளீயீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே இந்தப் படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகப்போவதாக அவ்வப்போது செய்தி வரும். அதைப் படக்குழுவினர் மறுத்துவந்தனர்.

சில வாரங்களுக்குப்பின் நேரடியாக இணையத்தில் படம் வெளியாவது உறுதியானது.

சுமார் நாற்பத்தைந்து கோடி ரூபாய்க்கு இப்படம் வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன என்று பிப்ரவரி மாதமே சொல்லப்பட்டது.

அதன்பின், மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் நன்றாக வசூல் செய்ததால், ஜகமே தந்திரம் படத்தையும் முதலில் திரையரங்குகளில் வெளியிடுவது அதன்பின் இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடுவது என்று ஒரு திட்டம் சொல்லப்பட்டது.

அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.

அதோடு இப்போது ஒட்டுமொத்தமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று மாலை, ஜூன் 18 அன்று நேரடியாக இணையத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts