முரண்டு பிடிக்கும் கமல் – இந்தியன் 2 படத்தில் புதிய சிக்கல்
இந்தியன் 2 படம் தொடங்கியதிலிருந்து பல்வேறு சிக்கல்கள். அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்தது.
திடீரென படப்பிடிப்புத் தளத்தில் பிப்ரவரி 19 அன்று நடந்த விபத்து காரணமாக மீண்டும் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருக்கும் அரங்கில் இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம்.
அதன்பின் பெரம்பூர் பின்னிமில்லில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.இதற்காக அங்கே பெரிய அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்.அந்த வேலைகளும் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அப்புதிய சிக்கல் கமலின் சம்பளம் குறித்த சிக்கலாம்.
இதே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் 2016 இல் தொடங்கப்பட்ட படம் சபாஷ் நாயுடு. அந்தப்படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அந்தப்படத்துக்காகப் பெரும் தொகையைக் கமல் வாங்கியிருந்தாராம்.
அதில் செலவு போக மீதித்தொகையை இந்தியன் 2 படத்துக்கான சம்பளமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று லைகா தரப்பில் சொல்லியிருந்தார்களாம். அப்போது அதை கமல் ஒப்புக் கொண்டார் என்று சொல்கிறார்கள்.
ஆனால், இப்போது அதுவேறு இதுவேறு இந்தியன் 2 படத்துக்கான என் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கமல் சொல்லிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
இதனாலும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்கிறார்கள்.
படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக கமல் லைகா நிறுவனத்துக்கு எழுதிய கடிதம் பொது அரங்கில் வெளியானதும் அதற்குப் பதிலடியாக சமூக வலைதளத்திலேயே லைகா ஒரு கடிதத்தை வெளியிட்டதற்கும் இந்தச் சிக்கல்தான் பின்னணி என்றும் சொல்கிறார்கள்.











