சினிமா செய்திகள்

உயிர்பெறும் இந்தியன் 3 காரணம் ரஜினி – வியக்கவைக்கும் புதிய தகவல்

தமிழ்த் திரையுலகின் இருபெரும் உச்ச நட்சத்திரங்கள் கமலும் ரஜினியும்.இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் அவர்களிருவரும் சேர்ந்து நடித்திருந்த அபூர்வ ராகங்கள் படம் வெளியானது.அப்போது தொடங்கிய அவர்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. தொழிலில் நேரடிப் போட்டியாளர்களாக இருந்தாலும் அதைத் தாண்டியதாக அவர்களுடைய நட்பு அமைந்திருந்தது. இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவருமே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த நட்பின் வெளிப்பாடாக நடந்த நிகழ்வுகள் ஏராளமென்றும் அவை அவர்களிருவரைத் தாண்டி வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் என்றும் அவர்களை அறிந்தவர்கள் கூறுவார்கள்.

அவர்கள் வெளிப்படுத்தாத அப்படி ஒரு நிகழ்வு அண்மையில் நடந்திருக்கிறது.திரையுலகில் மிகச்சிலர் மட்டுமே அறிந்து வியக்கும் அந்நிகழ்வு என்ன தெரியுமா?

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஜூலை 12 அன்று அப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 வெளியானது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து எடுத்தவற்றைப் போட்டுப் பார்த்தபோது வேண்டாமென ஒதுக்கியது போகவே சுமார் ஏழு மணி நேரப் படம் இருந்தது. அதனால் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.

அதனால்,ஒரு படம் எனத் திட்டமிட்டு எடுத்த காட்சிகளில் இன்னொரு படமாக நீட்டிப்பதற்காக சில மாற்றங்கள் செய்து படப்பிடிப்பு நடத்தி இந்தியன் 2 படத்தை வெளியிட்டார்கள்.

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியான அந்தப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரும் தோல்வி அடைந்தது.

அதனால் சார்ந்தோர் அனைவருக்கும் பேரரதிர்ச்சி என்றாலும் அதை மறைத்துக் கொண்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள்.

இயக்குநர் ஷங்கருக்கு உடனடியாக கேம் சேஞ்சர் பட வேலைகள் இருந்தன. கமல் தக்லைஃப் வேலைகளில் இருந்தார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் கேம் சேஞ்சர் படம் வெளியானது.அதுவும் பெரும் தோல்வி.

அப்போதே இந்தியன் 3 அவ்வளவுதான் என்கிற பேச்சுகள் எழுந்தன.தயாரிப்பு நிறுவனம் அந்தப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடத் திட்டமிட்டுவிட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது.

ஆனாலும், ஷங்கர் இயக்குநர் தானே, அப்படத்தின் நாயகன் கமல் வெற்றிப்பாதையில் தான் இருக்கிறார்.அவருடைய வெற்றிப்பயணத்தில் மேலும் ஓர் உச்சமாக தக் லைஃப் படம் இருக்கும்.அப்படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் இந்தியன் 3 படத்துக்கு உயிர் கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தனர்.

தக் லைஃப் தக் டெத்தாகிவிட இனி இந்தியன் 3 அவ்வளவுதான் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில்தான் அந்த ஆச்சரியம் நடந்திருக்கிறது.

அண்மையில் நடந்த ஒரு புத்தகநிகழ்வில் ரஜினி கலந்துகொள்ள வேண்டுமென விருப்பப்பட்டு அவரை அழைத்திருக்கிறார் ஷங்கர்.

அப்போது, இருவரும் உரையாடிய நேரத்தில், இந்தியன் 3 பற்றிப் பேச்சு வந்திருக்கிறது.

அந்தப் பேச்சு வந்ததும் ரொம்பவே புலம்பித் தள்ளிவிட்டாராம் ஷங்கர். இந்தப் படத்துக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டோம்.படப்பிடிப்புத் தளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமெல்லாம் நடந்தது. அவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எடுத்த படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. கமல் சாரின் அரசியல் காரணமாக அப்படம் வெளிவருவதற்கு முன்பே அப்படத்துக்கு எதிராக நிறையப்பேர் வேலை செய்தார்கள். அதனால் அப்படத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வரவேற்பை கிடைக்கவிடாமல் செய்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

எல்லாம் ஓகே இந்தியன் 3 என்னாச்சு? என்று ரஜினி கேட்க, இந்தியன் 2 படத்துக்காக யாரும் செய்யமுடியாத வகையில் பல நூறு கோடி முதலீடு போட்ட தயாரிப்பு நிறுவனம், இந்தியன் 3 படத்தை முழுமையாக்க இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்றால் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். இவ்வளவு செய்துவிட்டார்கள் இதையும் செய்தால் படம் நிறைவடையும், ஆனால் தயாரிப்பாளர் செய்ய மறுக்கிறார் கமல் சாரும் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அதைக் கேட்டவுடன் அதைச் சொன்ன ஷங்கரே ஆச்சரியப்படும்படி சுபாஸ்கரன் சார் கமல்சார் கிட்ட நான் பேசறேன் அந்தப்படம் நடக்கும் கவலைப்படாதீங்க என்றாராம் ரஜினி.

சொன்னதைச் செய்துமிருக்கிறார் ரஜினி. சுபாஸ்கரன், கமல் ஆகிய இருவரிடமும் அவரே போன் செய்து பேசியிருக்கிறார்.அவர்களிடமும் என்ன சிக்கல்? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார்.

ரஜினி சொன்னதை, ஷங்கர்,சுபாஸ்கரன்,கமல் ஆகிய மூவருமே ஏற்றுக் கொண்டார்களாம்.

அப்படி என்ன சொன்னார்?

இந்தியன் 3 படத்துக்காக ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கவேண்டும் என்பதோடு இந்தியன் 3 படத்துக்காக ஷங்கர்,கமல் ஆகியோர் உட்பட சிலருக்கு தனியாக சம்பளம் தரவேண்டும் என்பதும் படக்குழுவின் கோரிக்கை.

இந்தியன் 2 படத்திலேயே பெரும் செலவு செய்தோம்,இலாபம் கிடைக்காவிட்டாலும் தாழ்வில்லை நட்டமில்லாமில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.மாறாக, பெரும் நட்டத்தைச் சந்தித்து விட்டோம் என்பதால் இனிமேல் அந்தப்படத்துக்காக ஒருரூபாய் கூட செலவு செய்யவியலாது என்பது தயாரிப்பு நிறுவனத்தின் நிலைப்பாடு.

இந்த விவரங்களை அறிந்து கொண்ட பின் இது தொடர்பாக ரஜினி பேசிய சமரசம் பேசியிருக்கிறார்.அதன் அடிப்படையில், இந்தியன் 3 படத்துக்கென ஷங்கர் உட்பட யாருக்கும் சம்பளம் கிடையாது.படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டுச் செலவுகளை தயாரிப்பாளர் பார்த்துக் கொள்வார்.படப்பிடிப்பை நடத்தி படத்தை நிறைவு செய்து கொடுத்துவிடுவது ஷங்கர் பொறுப்பு என ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனராம். அதன்பின் மீதமிருக்கும் படப்பிடிப்பை எப்போது நடத்துவது? எங்கு நடத்துவது? அதற்கான செலவு எவ்வளவு ஆகும்? என்கிற திட்டமிடல்கள் எல்லாம் சுறுசுறுப்பாகத் தொடங்கப்பட்டுவிட்டனவாம்.

தனக்கு எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத ஒரு படத்துக்காக தானே இறங்கிவந்து ஒன்றுக்குப் பலமுறை சம்பந்தப்பட்டவர்களோடு பேசி இதை நடத்தியிருக்கிறார் ரஜினி.

இதனால் படக்குழு உற்சாகமாக வேலைகளைத் தொடங்கியிருக்கிறதாம். இந்தத்தகவல் தெரிந்தவர்கள் எல்லாம் வியப்பு மேலிட மூக்கில் விரல் வைக்கிறார்கள்.

ரஜினியின் செயலில் சினிமா மீதான காதலும் நட்புக்கான மரியாதையும் ஒருசேர வெளிப்பட்டிருக்கிறது எனச் சொல்லி சொல்லி வியக்கிறார்கள்.

– நன்றி குமுதம் வார இதழ்

Related Posts