பிரசாந்த் படத்தில் மோகன்ராஜா இல்லாமல் போனது ஏன்?
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.
இந்தப் படத்தின் தமிழ் மொழி மாற்று உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தப் படத்தின் இயக்குநராக மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பளம் பேசி முன் தொகை கொடுத்து அலுவலகமும் போட்டு வேலைகள் நடந்துவந்தன.
இந்நிலையில் இப்படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,இந்தப்படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மோகன்ராஜா இந்தப்படத்தில் இல்லாமல் போனது ஏன்?
மோகன்ராஜா இந்தப்படத்தை இயக்குவதற்காகக் கேட்ட சம்பளம் பெரிது. பலமுறை பேச்சு நடத்தியபின் அவருக்கு நாலு கோடி சம்பளம் என்று முடிவு செய்யப்பட்டதாம்.
அதன்பின் படப்பிடிப்பு குறித்த திட்டமிடல்களின் போது மோகன்ராஜா சொன்ன விசயங்களை எல்லாம் செயல்படுத்தினால் மிகப்பெரிய செலவு பிடிக்கும் எனும் நிலை. இதனால் இது தொடர்பாக தயாரிப்பாளர் தியாகராஜனுக்கும் இயக்குநர் மோகன்ராஜாவுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே போனதாம்.
இதனால் ஒருகட்டத்தில் இருவருமே இப்படத்தில் இணைந்து பணிபுரிய வேண்டாம் என்கிற முடிவை எடுத்துவிட்டார்களாம். இப்படத்துக்காக வாங்கிய முன் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக மோகன்ராஜா சொல்லியிருக்கிறாராம்.
இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்தபோது ஜே.ஜே.பிரட்ரிக்குடன் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு நல்ல அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவரிடமே பேசி இந்தப்படத்துக்கு இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.
இந்த முடிவால் தியாகராஜனுக்கு பலகோடி ரூபாய் மிச்சம் என்று சொல்கிறார்கள்.











