விஜய்சேதுபதியின் நம்பிக்கை வீண்போகவில்லை
விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 96.
சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அக்டோபர் 4 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.
ஒரேஇரவில் நடக்கும் முழுநீள காதல்கதையாக உருவாகியுள்ளது இந்தப்படம்.
இந்தப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது. பொதுவாக, படம் வெளியாவற்கு முந்தைய நாள் அல்லது படம் வெளியாகும் நாளில் பத்திரிகையாளர் காட்சி இருக்கும்.
அதுவும் இணையதளங்களின் வேகத்தால் படத்தை முன்கூட்டியே திரையிடுவது என்பது விஷப்பரீட்சை எனும் நிலை.
அப்படியிருக்கும்போது வெளியீட்டுக்கு மூன்றுநாட்கள் முன்பாகவே படத்தைத் திரையிட்டது எப்படி?
இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது, எனவே ஒன்றாம்தேதியே படத்தைத் திரையிடலாம் என்று படத்தின் நாயகன் விஜய்சேதுபதி சொன்னாராம். படக்குழுவினர் தயங்கியபோதும், நம்பிக்கையாகத் திரையிடுங்கள் என்று ஊக்கம் கொடுத்தாராம்.
அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. படத்தைப் பார்த்த ஊடகத்துறையினர் அனைவரும் படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாகப் பாராட்டுகின்றனர்.
இதனால் படத்துக்குப் பெரும்பலம் கிடைத்திருக்கிறது என்பதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.











