மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார் – புதுநடிகர் குமுறல்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி உட்பட பலர் நடிக்கும் படம் சைக்கோ.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 7 அன்று சென்னையில் தொடங்கியது. சில நாட்களில் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு கோவையில் செப்டம்பர் 26 முதல் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குநர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் என்னைக் கதாநாயகனாக வைத்துப் படமெடுப்பதாக ஒப்பந்தம் போட்டு என் தந்தையிடம் பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றார்.
சவரக்கத்தி படத்தை முடித்துவிட்டு என் படத்தைத் தொடங்குவதாகச் சொன்னார். அதன்பின், விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்தை எடுக்கிறேன் என்றார்.
ஆனால், இப்போது உங்கள் படத்தை எடுக்க முடியாது முன்பணத்தையும் இப்போதைக்குத் திருப்பித் தர இயலாது என்கிறார்.
சைக்கோ படத்தின் கதை எனக்குத் தெரியும். அந்த வேடத்துக்காக நான் இரண்டாண்டுகளாக நிறையப் பயிற்சிகள் எடுத்தேன். என்னை வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்த அவர், உங்கள் மகன் நடிப்பு நன்றாக இருக்கிறது. அவர் பெரிய நடிகராக வருவார் என்று என் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பினார்.
என்னை வைத்துப் படமெடுக்க வேறு சில இயக்குநர்கள் முன்வந்த போதும், சைக்கோதான் உன் முதல்படமாக இருக்கவேண்டும் என்றார் மிஷ்கின். அதனால் வந்த வாய்ப்புகளையும் விட்டுவிட்டேன்.
இது நமக்கானது என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்துவிட்டு அது இல்லையெனும்போது ஏற்படுகிற வலி சொல்லி மாளாதது. அந்த வலியை நான் இப்போது அனுபவிக்கிறேன்
இவ்வாறு அவர் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார்.










