கேரளாவில் திரையரங்குகள் மூடல் – 2018 பட இயக்குநர் விளக்கம்
தற்காலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் இணையதள ஒளிபரப்பு சேவைகள் திரைப்படங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அதேநேரத்தில் அவை திரையரங்குகளைக் கொன்று கொண்டிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்திய ஒன்றியம் முழுவதிலுமுள்ள இச்சிக்கல், கேரளாவில் மோதலாக வெடித்துள்ளது.
அங்கு, ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் விரைவாக வெளியிடப்படுவதைக் கண்டித்து இன்றும் நாளையும் கேரளாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடப்படுவதாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதற்குக் காரணம், ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாளத் திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.
அதே போல ஃபகத் ஃபாசில் நடித்த ‘பச்சுவும் அத்புத விளக்கும்’ திரைப்படமும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில், திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் விரைவிலேயே வெளியாவதைக் கண்டித்து இன்றும் (ஜூன் 7) நாளையும் (ஜூன் 8) கேரளாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடப்படுவதாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கே.விஜய்குமார் கூறியதாவது….
‘2018’ மற்றும் ‘பச்சுவும் அத்புதவிளக்கும்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஓடிடியில் இதுபோன்ற திரைப்படங்களை முன்கூட்டியே வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மட்டுமே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்குமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஓடிடி தளங்களுக்கு இணையாக திரையரங்குகளை எங்களால் இயக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். திரைப்படங்களின் ஓடிடி வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், திரையரங்குகளுக்குச் செல்லும் மக்கள் அங்கே செல்வதில்லை. தயாரிப்பாளர் இன்னும் சில நாட்கள் காத்திருந்திருந்தால் ‘2018’ கேரளாவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இச்சிக்கல் குறித்து 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் வெளியிட்டுள்ள பதிவில், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டத்தை மதிக்கிறேன். வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தை நம்பிப் பணம் போட்டது சோனிலைவ் நிறுவனம்.அதனால் தயாரிப்பாளர் பாதுகாக்கப்பட்டார். அதனால் எல்லாம் சுமுகமாக நடந்தது. எனவேதான் இப்போது படம் இணையத்தில் வெளியாகிறது. இது வேண்டுமென்றே செய்த செயல் அன்று
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.