September 21, 2026
சினிமா செய்திகள்

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டியது ஏன்? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று 44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார்.

இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டுள்ளது.

பிரபல நடிகர் இப்படிச் செய்யலாமா? இதற்காக அவரைக் கைது செய்யவேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.

இந்த சர்ச்சைக்குப் பின் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

வணக்கம்,

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், இரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.

இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும்.

ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.

இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

நன்றி
விஜய் சேதுபதி

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts