பிக்பாஸ் 8 – விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார்

விஜய் தொலைக்காட்சியின் பலமாக இருக்கும் நிகழ்ச்சி.அத்தொலைக்காட்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் அந்நிகழ்ச்சி பெரும் பங்காற்றுகிறது. ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு.
இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன்.அவர் தொகுப்பாளராக இருந்ததும் அந்நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய அடையாளமாக இருந்ததென்றால் மிகையில்லை.
இவ்வாண்டும் அவரே தொகுப்பாளராகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார் கமல்ஹாசன்.
அவர் விலகிவிட்டதற்காக நிகழ்ச்சியை நிறுத்திவிட முடியாதே? வேறொருவரைத் தேடும் பணி தொடங்கியது.
அந்த விசயம் தெரிந்ததும், இவ்வாண்டு அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது யார்? என்கிற பெரிய பட்டிமன்றம் வெளியே நடந்து கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் அடிபட்டுவருகின்றன.
முன்னதாக, கமல்ஹாசனுக்கு அடுத்து இந்நிகழ்ச்சியில் சிம்பு பங்குபெறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.ஏனெனில், இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.அதனால் கமலுக்குப் பிறகு அவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்பட்டது.
இப்போது அவரை அணுகியிருக்கிறார்கள்.ஆனால், அவரும் என்னால் இயலாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டாராம்.
இதனால், பிக்பாஸ் தமிழ் எட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க,நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இருவரில் சூர்யா வரிசையாகப் படங்கள் வைத்திருக்கிறார்.ஏற்கெனவே அவற்றிற்காகத் தேதிகள் ஒதுக்கித் தந்துள்ளார்.எனவே,என்னால் இயலாது என்று அவர் சொல்லிவிட்டார்.
விஜய்சேதுபதியின் கைவசம் இருக்கிற படங்களை முடித்துவிட்டார்.புதியபடங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே,பிக்பாஸ் தமிழ் எட்டு நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று சொல்லப்பட்டது.
இப்போது அது உறுதியாகிவிட்டதாம்.
ஆம்,பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுவிட்டாராம்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன என்று சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டமாக அவருடன் ஒப்பந்தம் போடவிருக்கிறார்கள் என்றும் அது விரைவில் நடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் இவ்வாண்டு அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில்,விஜய்சேதுபதி மற்றும் போட்டியாளர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.