சினிமா செய்திகள்

அரசியல்குறித்து விஜய் கையெழுத்தில்லாமல் வெளியாகியுள்ள அறிக்கை

இன்று மாலை, தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இன்று என் தந்தை திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல்கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மேலும்,எனது ரசிகர்கள் எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சிப் பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை விஜய்யின் கடிதத்தாளில் வெளியிடப்படவில்லை. ஒரு வெள்ளைத்தாளில் விஜய் கையெழுத்தில்லாமல் வெளியாகியிருப்பதால் இதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

Related Posts