சினிமா செய்திகள்

அனிருத் இல்லை அட்லி பரிந்துரை – எஸ்டிஆர் 49 இசையமைப்பாளர் விவரம்

சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதியன்று எஸ்டிஆர் 49,50,51 ஆகிய அவருடைய மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

இம்மூன்று படங்களில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இவ்விரண்டு தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் அவர் அதிரடியான கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்படத்துக்கு இசையமைக்கப் போகிறவர் யார்? என்கிற கேள்வி பரவலாக எழுந்தது.

அக்கேள்விக்கு விடையாக அனிருத் இந்தப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இந்தப்படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பவர் புதிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.

இளம் இசையமைப்பாளரான இவர் 2024 தொடக்கத்தில் வெளியிட்ட கட்சி சேர மற்றும் ஆசை கூட ஆகிய தனிப்பாடல்கள் மூலம் பெரும் கவனம் பெற்றார்.

அண்மையில்,ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 ஆவது படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.அந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே அவருக்கு மாற்றாக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஒட்டுமொத்த திரையுலகினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இப்போது எஸ்டிஆர் 49 படத்துக்கும் அனிருத்துக்கு மாற்றாக இவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்பது மிகப்பெரிய வியப்பூட்டும் செய்தியாக இருக்கிறது.

சாய் அபயங்கரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யலாம் என்கிற பரிந்துரையைச் செய்தவர் இயக்குநர் அட்லீதான் என்றும் சொல்லப்படுகிறது.அவர் பரிந்துரையை சிம்புவும் ஏற்றுக் கொண்டார் என்கிறார்கள்.

அனிருத் கைவசம் நிறையப் படங்கள் இருப்பதால் இந்தப்படத்தில் பணியாற்ற முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் அவர் இப்படத்தை இழந்திருப்பது அவருக்குப் பெரிய நட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

அதற்குக் காரணம்,சாய் அபயங்கர் தனிப்பாடலில் தன் திறமையை நிரூபித்திருந்தாலும் ஒரு முழுநீளத் திரைப்பட இசையமைப்பாளராக எப்படிச் செயல்படுவார்? என்பது தெரியாமல் இருக்கிறது.இப்போது அதற்கும் விடை கிடைத்திருக்கிறது.

ஏனெனில்,இசைத்துறையிலும் வல்லவரான சிம்பு, தன் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க வைத்திருக்கிறார்.இருவரும் இணைந்து பணியாற்றும் நேரத்தில், திரைப்படத்துறைக்கேற்ற இசையை எப்படிக் கொடுப்பது என்பதை அவருக்குக் கற்றுக்கொடுத்துவிடுவார். இதனால் சாய் அபயங்கருக்கு திரைத்துறையிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நல்லதே நடக்கட்டும்.

Related Posts