விஜய் 65 – இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விவரங்கள்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு.
அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறதாம்.
ஒரு மிகப்பெரிய வணிகவளாகம் (ஷாப்பிங் மால்) போன்ற அரங்கம் அமைக்கப்படுகிறதாம். அந்த அரங்கத்தில்தான் நாற்பது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
பலகோடி செல்வில் அவ்வளவு பெரிய அரங்கு அமைப்பதற்கும் அதில் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கும் காரணம் இருக்கிறதாம்.
படத்தின் மையக்கதை ஒரு வணிகவளாகத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையான வணிக வளாகங்களில் படமாக்கினால் நினைத்தது போல் எடுக்கவியலாது என்பதால் தனியாக அரங்கம் அமைக்கிறார்களாம்.
இவ்வரங்கத்திலேயே இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். கொரோனா விதிமுறைகள் மற்றும் ஊரடங்கு ஆகியனவற்றைப் பொருத்து படப்பிடிப்பில் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.











