சூரி நாயகனாக நடிக்கும் முதல்படத்துக்கே இப்படியா? – ஆச்சரிய தகவல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதைநாயகனாகவும் வாத்தியாராக விஜய்சேதுபதியும் நடித்திருக்கும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 அன்று வெளியாகவிருக்கிறது.
இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட்குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் இப்போது இப்படத்தைத் திரையிடும் திரையரங்குகள் ஒப்பந்தம் நடந்துகொண்டிருக்கிறது.
பொதுவாக திரையரங்குகளில் ஒரு படத்தைத் திரையிடும்போது பெரும் வணிகவளாகங்களில் அமைந்துள்ள பெருநிறுவன அரங்குகளுக்கு நுழைவுச்சீட்டுக் கட்டணத்தில் ஆளுக்கு ஐம்பது விழுக்காடு என ஒப்பந்தம் போடுவார்கள். மற்ற திரையரங்குகளில் 55-45 அல்லது 60 -40 என்று படத்துக்குத் தகுந்தவாறு ஒப்பந்தம் நடக்கும்.அதாவது நுழைவுச்சீட்டு விலை நூறு ரூபாய் என்று வைத்துக் கொண்டால் அதில் திரையரங்குக்காரர்களுக்கு 40 ரூபாய். தயாரிப்பாளருக்கு அறுபது ரூபாய் என்பது கணக்கு.
ரஜினி, விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்கள் படம் வரும்போது பெருநிறுவன அரங்குகளில் 55 -45 என்றும் மற்ற அரங்குகளில் 70 -30 என்று ஒப்பந்தம் போடுவார்கள்.
இப்போது விடுதலை படத்துக்கும் 70 -30 என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
திரையரங்குகளைப் பொறுத்தவரை கதாநாயகர்களை மட்டுமே முதன்மையாகக் கணக்கில் எடுப்பார்கள். இயக்குநர்கள் அதற்கடுத்துதான்.
அந்தவகையில் பார்த்தால் விடுதலை படத்தின் கதைநாயகன் சூரிதான். அப்படித்தான் அனைத்து விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.
அதனால், சூரி கதைநாயகனாக நடிக்கும் முதல்படத்துக்கே எழுபது விழுக்காடு தயாரிப்பாளருக்குப் பங்கு கொடுக்க திரையரங்குகள் ஒப்புக்கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.











