சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் 2 அணிகள் – முழுவிவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோர். பொருளாளராக சந்திரபிரகாஷ்ஜெயின் போட்டியிடவிருக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சவுந்தர் போட்டியிடுகிறார்.

இன்னொரு பக்கம், இப்போது செயலாளராக இருக்கும் மன்னன் தலைமையில் ஓர் அணி உருவாகியிருக்கிறது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் செயலாளர்களாக கமீலாநாசர் மற்றும் தேனப்பன் ஆகியோர் போட்டியிடவிருக்கிறார்களாம். துணைத்தலைவர்களாக மைக்கேல்ராயப்பன், விடியல்ராஜு ஆகியோர் போட்டியிடவிருக்கிறார்கள்.

இந்த அணியில் பொருளாளராக லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் போட்டியிடுகிறார்.இணைச்செயலாளர் பதவிக்கு சி.மணிகண்டன் போட்டியிடுகிறார்.

இரண்டு அணிகளிலும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கான தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.

இரண்டு அணிகள் போட்டியிடுவது உறுதியாகியிருப்பதால் தேர்தல் சூடுபிடித்திருக்கும் அதேநேரம் போட்டியில்லாமல் நிர்வாகிகளை முடிவு செய்யலாம் என்கிற முயற்சியும் தொடங்கியிருக்கிறதாம்.

Related Posts