வேடுவன் – இணையத் தொடர் விமர்சனம்

வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள்.
சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது.
நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர் நடிக்கும் படமொன்றில்,இரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் ரவுடி சஞ்சீவை என்கவுண்டர் செய்யவேண்டும். சஞ்சீவ் தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பதையும்,ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வலம் வருவதையும் கண்ணா ரவி அறிந்து கொள்கிறார்.
ஆனால், தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கண்ணா ரவி, திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா? இல்லையா?
இந்த நிகழ்வு நடிகர் கண்ணா ரவியின் நிஜவாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எந்த வகையில் பாதித்தது? அதனால் என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘வேடுவன்’.
நடிகர் வேடம் என்பதால் பல்வேறு தோற்றங்களில் வருகிறார் நாயகன் கண்ணா ரவி.அவற்றிற்கேற்ப நடித்து நல்ல வரவேற்பையும் பெறுகிறார்.
முதலில் தாதா பின்பு நல்லவன் என நடித்திருக்கும் சஞ்சீவ்,இது இன்னொரு நெடுந்தொடர் என்று நினைத்தே நடித்திருக்கிறார்.
ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா ஆகியோர் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும் அவற்றில் அவர்கள் நடிப்பும் விழிகளை உயர்த்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.
ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, காட்சி ஊடகத்தில் சொல்லப்படும் கதை என்பதை உணர்ந்து செய்யப்பட்டிருக்கிறது.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை, தொடரை முன்னணிக்குக் கொண்டுவர உழைத்திருக்கிறது.
சூரஜ் கவியின் படத்தொகுப்பு, தொடரைச் சலிப்பின்றி இரசித்துப் பார்க்க வைக்க பெரிதும் பாடுபட்டிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் பவன்குமார். கதையின் நாயகன் ஒரு திரைப்பட நடிகர் என்று எடுத்துக் கொண்டு திரைக்கதையில் மிகச் சுதந்திரமாக இயங்கியிருக்கிறார்.ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் அடுத்து என்ன? என்று எதிர்பார்க்க வைத்திருப்பது அவருக்குப் பலம்.
– இளையவன்
இந்தத் தொடர் ஜீ 5 இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.