சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா ஒப்புக்கொள்வாரா? – வர்மா படக்குழு தவிப்பு

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மொழிமாற்றாக உருவான படம் வர்மா. விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான அந்தப்படத்தை பாலா இயக்கினார்.அந்தப் படம் முழுமையாகத் தயாரானாலும், அதன் இறுதி வடிவம் திருப்தி தரவில்லை என்று சொல்லி கைவிட்டுவிட்டார்கள். தமிழ்த் திரையுலகில் ஒரு படம் முழுமையாகத் தயாராகி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

அதன்பின் கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் படம் வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியில் வரவேற்பைப் பெறவில்லை.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ‘வர்மா’ சிங்கப்பூரில் தணிக்கை செய்யப்பட்டது. அதன் சான்றிதழ் இணையத்தில் வெளியான போது பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

இது தொடர்பாக விசாரித்தபோது, ‘வர்மா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது உறுதியானது. ஆனால் தொலைக்காட்சியில் ப்ரிமீயர் முறையில் திரையிடலாமா, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடலாமா அல்லது திரையரங்கில் வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது. அனைத்திற்குமே தயாராக இருக்கும் வகையில், படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘வர்மா’ வெளியீடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே படத்தைக் கைவிடுவதாக அறிவித்ததால் கடும் கோபத்தில் இருக்கும் இயக்குநர் பாலாவை சமாதானப் படுத்தினால் தான் படத்தை வெளியிட முடியும் என்பதால் அந்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts