இந்த நிலை மாறும் – திரைப்பட விமர்சனம்
மென்பொருள் பொறியாளராக நல்ல சம்பளம் வாங்கும் நாயகன் ராம்குமார் சுதர்ஷன் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்கிறார். அவருக்கு நண்பன் அஷ்வின்குமார் உதவி செய்கிறார்.
நாயகி நிவேதா சதிஷுடன் இணைந்து இணையதள வானொலி தொடங்குகிறார்கள்.அதற்கு சாம்ஸ் உதவி செய்கிறார்.
வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி சமுதாய அக்கறையோடு இவர்கள் செய்யும் நிகழ்ச்சி பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
அது என்ன நிகழ்ச்சி? சிக்கலிருந்து எப்படி மீள்கிறார்கள்? என்பதைச்சொல்வதுதான் படம்.
ராம்குமார் சுதர்ஷன், அஷ்வின் குமார்,நாயகி நிவேதா சதீஷ் ஆகியோர் வானொலி தொகுப்பாளராகவே மாறியிருக்கிறார்கள்.
சாம்ஸுக்கு நல்ல வேடம். அவர் கூடுதல் உற்சாகத்துடன் துள்ளலாக நடித்திருக்கிறார்.
ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு சோதிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தரை வானொலி அறைக்குள்ளும் நீதிமன்ற அறைக்குள்ளும் அடைத்து வைத்துவிட்டதால் மற்ற நேரங்களில் எல்லாம் வானிலேயே பறக்கிறது அவரது ஒளிப்பதிவுக்கருவி.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, இசை, பாடல், படத்தொகுப்பு, கலை, ஒலியமைப்பு, டிஐ கலர், ஆடைகள், கிராபிக் டிசைன்ஸ் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார் அருண்காந்த்.
திருமண ஏற்பாட்டு நிறுவனங்கள் குறித்து சொலியிருப்பதோடு திருமணம் மற்றும் பெண் வீட்டாரின் எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் சிரித்துக் கொண்டே விமர்சனம் செய்திருக்கிறார்.
விவசாயிகளுக்கும், இராணுவ வீரர்களுக்கும் பெண் கொடுக்க மறுப்பவர்கள், ஐடி துறை மற்றும் அரசுப் பணியாளர்களுக்குப் பெண் கொடுப்பது மற்றும் ஆண்கள் சம்பாத்தியத்தை வைத்து பெண் கொடுப்பது ஆகியனவற்றுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார்கள்.
நீதிமன்றக் காட்சிகள் நம்ப முடியாதவையாக இருக்கின்றன.
திரைப்பட ஆக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும் இந்தப்படம்.











