மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழா – அதிகாரப் பூர்வ அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2 ஆம் தேதியோடு முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மார்ச் 15 அன்று நடக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. முந்தைய படங்களின் பாடல் வெளியீடு போல பெரிதாகச் செய்யாமல் எளிமையாக நடத்தவேண்டும் என்றும் ரசிகர்களை அழைக்க வேண்டாம் என்றும் விஜய் கூறியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
மாஸ்டர் படப்பிடிப்பின் போது படப்பிடிப்புத் தளத்துக்கே சென்று விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாஸ்டர் பாடல் விழாவில் விஜய் அதற்குப் பதில் சொல்வார் என்பதால் அவ்விழாவுக்குப் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் மாலை 6.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் என்ன பேசப்போகிறாரோ? என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.












