சினிமா செய்திகள்

வலிமை படப்பிடிப்பு தாமதம் மற்றும் ரிலீஸ் தேதி – விவரங்கள்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறதாம்.

இதற்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டனர். அது முடியாமல் போனது. அதனால் தமிழகத்தில் அல்லது இந்தியாவின் ஏதாவதொரு நகரத்தில் படமாக்கிவிடலாம் என்று நினைத்து, அச்சண்டைக்காட்சியில் இடம்பெறவிருக்கும் வெளிநாட்டுத் துள்ளுந்தை (பைக்) இங்கே கொண்டு வர முயன்றார்களாம். ஆனால், அதற்கான நடைமுறை மற்றும் செலவுகள் ஆகியன அளவுக்கதிகமாக ஆகும் என்பதால் அத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டு இங்கே உள்ள வசதிகளைப் பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்திவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

அதற்குள், அக்காட்சியில் அஜித்துடன் நடிக்க வேண்டிய ஹூமாகுரேசி, ஓர் ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டாராம். அவர் வந்த பின்புதான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதால் காத்திருக்கிறார்களாம்.

இதனால், ஆகஸ்ட் மாதத்தில் படத்தை கண்டிப்பாக வெளியிட்டுவிடுவது என்கிற முந்தைய திட்டம் பொய்த்துப்பொய்விட்டது. எனவே இப்போது அக்டோபர் 14 ஆம் தேதி ஆயுதபூஜை நாளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts