இன்னும் இருவாரங்களில் திரையரங்குகள் திறக்கப்படும் – திருப்பூர் சுப்பிரமணியன் தகவல்
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.அதன்பின் சில நாட்களில் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்வதால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில்தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக மே 25 அல்லது ஜூன் ஒன்றாம் தேதி திரையரங்குகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறதாம்.
இதுதொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திரையரங்கு உரிமையாளர்கள் குழுவில் மே முதல் வாரத்தில் வெளியிட்ட குரல்பதிவில்,
தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மே 25 அல்லது ஜூன் 1 ஆம் தேதி திரையரங்குகள் திறப்பதற்கான காலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்
என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது….
இப்போது வெளியிடப்படுள்ள அரசாணைப்படி, திரையரங்குகளைத் திறக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் திரையரங்கு பராமரிப்புகளை செய்யுங்கள் என்பதுதான். இதன்மூலம் இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் திரையரங்குகளைத் திறக்கும் உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.










