சினிமா செய்திகள்

விக்னேஷ்சிவன் புதுமுடிவு தயாரிப்பாளர் தவிப்பு – எல் ஐ கே பட சிக்கல்

பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபடமாக வெளியாக வேண்டியது எல் ஐ கே. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் வெளியீடு குறித்து கடந்த ஆண்டு, மே 12 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.சொன்னபடி அப்போது அந்தப்படம் வெளியாகவில்லை.

அதன்பின் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போதும் படம் வெளியாகவில்லை.

அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்தத் தேதியிலும் படம் வெளியாகவில்லை.

அதை கடைசிநேரத்தில்தான் சொன்னார்கள். அப்போதே இப்படம் பிப்ரவரி மாதம் காதலர் நாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டது.

அதனால் படம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு விரைவில் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடுகிறார்கள் என்கிற தகவல் வருகிறது.

இதனால்,தயாரிப்பாளர் லலித்குமார் திடுக்கிட்டுப் போயிருக்கிறாராம்.

அவர், இந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தயாரிப்பதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனிடம் ஒப்படைத்திருக்கிறார்.அதன்படி இவர் கொடுக்க வேண்டிய தொகை சுமார் அறுபத்தைந்து கோடியாம்.இதுவரை அறுபது கோடி கொடுத்திருக்கிறாராம்.இன்னும் ஐந்து கோடி தரவேண்டும் என்பது கணக்கு.

இதனிடையே இப்பட வெளியீடு குறித்த பேச்சு வந்தபோது, இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை ஆனால்தான் படத்தை வெளியிட முடியும் என்று லலித்குமார் சொல்லியிருக்கிறார்.

அதனால், அவற்றின் உரிமையைப் பெற்றுக்கொண்டு அதற்காக சுமார் இருபது கோடி தருவதாக விக்னேஷ் சிவன் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.ஆனால், அதை அவர் இதுவரை கொடுக்கவில்லையாம்.

அதோடு பட உருவாக்கத்தின் போது ஆன செலவில்,விக்னேஷ்சிவன் பாக்கி வைத்திருக்கும் சுமார் 11 கோடியை யார் தருவது? என்கிற குழப்பமும் நீடிக்கிறதென்கிறார்கள்.இந்தக் காரணங்களால் படவெளியீடு இன்னும் ஓரிருமாதங்கள் தள்ளிப் போகும் எனச் சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் என்றால்? இன்னொரு பக்கம் இப்படத்தின் தயாரிப்புச் செலவுக்கும் இதுவரை நடந்த வியாபாரம் மற்றும் இனி நடக்கவிருக்கும் வியாபார மதிப்பு ஆகியனவற்றைக் கணக்குப் போட்டால் சுமார் முப்பது கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுகிறதாம்.இதனால் தவித்துப் போயிருக்கும் தயாரிப்பாளர் இப்போது இன்னும் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்கிற விக்னேஷ்சிவன் முடிவால் மேலும் கலங்கிப் போயிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

படம் நன்றாக ஓடினால் இவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்கிற நம்பிக்கையில் அனைவரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே ஆகட்டும்.

Related Posts