தி வாரியர் – திரைப்பட விமர்சனம்
சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப் போகிறார் நாயகன் ராம்.
அங்கு மதுரையையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரு என்றழைக்கப்படுகிற ஆதியுடன் மோதல். அதனால் ஆதி, நாயகன் ராமை அடித்துத் துவைத்து பொதுஇடத்தில் காயப்போட்டுவிடுகிறார்.
அங்கிருந்து தப்பிச்செல்லும் நாயகன் என்ன செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கிறது தி வாரியர்.
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நாயகன் ராமுக்கு முதல்படத்திலேயே இருவித தோற்றங்கள். மருத்துவராக இருக்கும்போது வழக்கமான மீசை காவல்துறை அதிகாரி ஆனவுடன் முறுக்குமீசை என வேறுபடுத்திக் கொண்டிருக்கிறார்.காதல் மற்றும் சண்டைக்காட்சிகளில் பொறுப்பாக நடித்து தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
நாயகி கீர்த்திஷெட்டி, விசில் மகாலட்சுமி எனும் பெயரில் வானொலி தொகுப்பாளராக வருகிறார். ஆளும் அழகு, நடிப்பும் நன்று,அவர் அடிக்கும் விசில் இளைஞர்களைக் கவரும்.
வில்லனாக நடித்திருக்கிறார் ஆதி. மிருகம் படத்தில் நாயகனாக நடிக்கும்போது அவர் செய்த வில்லத்தனம்கூட வில்லனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் இல்லை. அவர் நடிப்புக்கேற்ற தீனி இல்லாதது அவர் குற்றமா? இயக்குநரின் குற்றமா?
நதியா, ஜெயப்பிரகாஷ், அக்ஷராகவுடா உள்ளிட்ட நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். படத்தின் வசனகர்த்தா பிருந்தாசாரதியும் மருத்துவர் வேடத்தில் நடித்திருக்கிறார், இவர்கள் அனைவருமே தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
சுஜித்வாசுதேவின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குத் தேவையான அளவு இருக்கிறது.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் துள்ளல் இரகம். பின்னணி இசையிலும் குறைவில்லை.
தெலுங்கில் நேரடியாக எடுத்துவிட்டு தமிழில் குரல்பதிவு செய்திருப்பது பல இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. மதுரையில் கதை நடக்கிறது என்று சொல்லிவிட்டு வேறொரு ஊரை மதுரை எனக்காட்டுவது மிகப்பெரிய தவறு,
ராம், கீர்த்திஷெட்டி ஆகியோரின் காதல் காட்சிகள் வண்ணமயமான பாடல்கள் ஒரே காட்சியில் வரும் ரெடின்கிங்ஸ்லியின் நகைச்சுவை ஆகியன படத்துக்குப் பலம்.
ஒரு ஊரில் ஒரு ரவுடி அவரைக் கொன்று கதாநாயகன் அந்த ஊரைக் காப்பாற்றுகிறார் என்கிற ஐதர் அலி காலத்துக் கதையும் அதற்கான திரைக்கதையும் பலவீனம்.
இயக்குநர் லிங்குசாமி கவிதைகளில் தன்னை இற்றைப்படுத்திக் கொள்பவர் திரைப்படங்களிலும் அதைச் செய்யவேண்டும்.











