விமர்சனம்

நிலை மறந்தவன் – திரைப்பட விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சி காரணமாக இப்போது இந்திய ஒன்றியம் என்றழைக்கப்படும் நிலப்பகுதிக்குள் கிறித்துவ மதமும் வந்தது. அன்பு கருணை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட அந்த மதத்தைச் சார்ந்தவர்கள், இந்நாட்டில் வெகுமக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வழங்கினார்கள். அதனால் அந்த மதத்தின்பால் பற்றுக் கொண்டு ஏராளமானோர் அந்த மதத்துக்குச் சென்றனர்.

வெள்ளையர்கள் போய் எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் அம்மதத்தின் தாக்கம் இங்கு குறைந்தபாடில்லை. அவர்களின் மக்கள் சேவைகள் தொடர்கின்றன. 

நல்லது இருக்குமிடத்தில் அல்லதும் இணைந்தே இருப்பதுதானே பொதுவிதி.

அதுபோல் அம்மதத்திலும்  குணக்கேடர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை அம்பலப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் நிலைமறந்தவன். 

மலையாளத்தில் டிரான்ஸ் என்கிற பெயரில் வெளியான அந்தப்படத்தின் தமிழ்மாற்றம்தான் நிலைமறந்தவன்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஃபகத்பாசில், தன் அசுர நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார். காட்சிக்குக் காட்சி அவர் காட்டும் மாற்றங்கள் சிறப்பு. 

நாயகியாக அவர் மனைவி நஸ்ரியாவே நடித்திருக்கிறார், சில காட்சிகளில் வந்தாலும் குறும்புத்தனம் கலந்த நடிப்பில் இரசிகர்களை ஈர்க்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் கவுதம்மேனன், செம்பன் வினோத் ஆகியோர் பயமுறுத்துகிறார்கள்.

சில காட்சிகளில் வரும் விநாயகன், மதங்களை நம்பி மாயும் மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி அதிர வைக்கிறார்.

அமல்நீரத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், படத்தின் கதையுடன் உலகம் முழுக்கப் பயணித்திருக்கிறது ஒளிப்பதிவுக்கருவி. நிஜமாக நடக்கும் மதக்கூட்டங்களைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஜாக்சன் விஜயன், சுஷின்ஷியாம் ஆகியோரின் இசையும் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

தமிழில் வசனங்கள் எழுதியிருக்கும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம், மதங்கள் மீது அளவு கடந்து நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை உணர்த்தியிருக்கிறார்.

இயக்குநர் அன்வர் ரஷீத், கிறித்துவ மதத்தில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த இஸ்லாமியரான ஃபகத்பாசிலைப் பயன்படுத்தி கதையில் அவரை ஓர் இந்துமதத்தினராகக் காட்டியிருக்கிறார்.

மதநிறுவனமொன்றில் குற்றம் நடக்கிறது என்கிற ஒற்றைவரியை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக்கொண்டே இருப்பதால் போரடிக்கிறது. 

Related Posts