தடம் – திரைப்பட விமர்சனம்
ஒரு கொலை நடக்கிறது. அதை அருண்விஜய் செய்திருப்பார் என்கிற சந்தேகம் ஒரு புகைப்படம் மூலம் வருகிறது. அருண்விஜய்யை கைது செய்து விசாரிக்கும் நேரத்தில் இன்னொரு அருண்விஜய் மாட்டுகிறார்.
அந்தக் கொலையைச் செய்தது இவரா? அவரா? என்கிற கேள்விக்கான விடையோடு ஏன் அந்தக் கொலை? என்பதற்கும் விடை சொல்வதுதான் படம்.
எழில், கவின் ஆகிய இருவேடங்களில் நடித்திருக்கிறார் அருண்விஜய். அன்பான பொறுப்பான இப்படிப்பல நல்ல சொற்களுக்குச் சொந்தக்காரராக ஒரு வேடமும், திருட்டு, சூதாட்டம், மது, புகை உள்ளிட்ட பல கெட்ட செயல்களுக்குச் சொந்தக்காரராக ஒரு வேடமும் அமைந்திருக்கிறது.
நேரெதிர் குணம் கொண்ட இரு வேடங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான வேறுபாட்டை சில நுட்பமான வேறுபாடுகளில் காட்டியிருக்கிறார்.
நல்லவாருக்கு ஜோடியாக தன்யாவும் கெட்டவருக்கு ஜோடியாக ஸ்மிருதியும் நடித்திருக்கிறார்கள். இருவரோடும் சம்பந்தப்பட்டவராக வருகிறார் வித்யாபிரதீப்.
மூவருடைய பாத்திரங்களும் அருமை. எல்லா ஆண்களுக்கும் பிடிக்கிற மாதிரி அமைந்திருக்கின்றன.
இருபதுநாள் உன்ன மறக்காம இருக்கணும்ல எனும்போது தன்யா மிளிர்கிறார். ஒரு இலட்சத்தோட போயிருந்தா மறக்கறது ஈஸியா இருந்திருக்கும் எனும்போது ஸ்மிருதி நெகிழ வைக்கிறார். என்ன நல்லா ஏமாத்திட்டான் என்று இடிந்து உட்காரும்போது வித்யாபிரதீப் கலங்க வைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் ஃபெப்சிவிஜயன், காவலர்களாக வரும் ஜார்ஜ் உள்ளிட்டோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
நகைச்சுவைக்கு யோகிபாபு. வருகிற எல்லாக்காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார்.சோனியா அகர்வால் வேடம் பொருந்தாமல் இருக்கிறது.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கேற்ப இருக்கிறது.ஒளிப்பதிவாளர்கள் மாறினாலும், இரவு நேர ஆளில்லா நீண்ட தெருக்கள், விளக்கு மரத்த்டியில் கதாபாத்திரங்கள் உள்ளிட்ட பல மகிழ்திருமேனி அம்சங்கள் இந்தப்படத்திலும் இருக்கின்றன.
அருண்ராஜ் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.
ஒரு சின்ன சிக்கலை எடுத்துக்கொண்டு அதை ஒவ்வொன்றாகப் பிரித்து எடுக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. அது சுவாரசியமாக இருக்கிறது. இதனால் திரைக்கதையோட்டத்தில் நிகழ்ந்திருக்கும் தவறுகளை மறந்துவிடலாம்.
திகில் திரைக்கதையில் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் தான் சிறந்த காதலன் என்று காட்டிவிட்டார். இறுதிக்காட்சியில் கவினுக்கு ஸ்மிருதி தரும் பிறந்தநாள் பரிசு அபாரம்.
அருண்விஜய்யின் திரைப்பயணத்தில் இந்தத் தடம், நிச்சயம் தடம் பதிக்கும்.











