சினிமா செய்திகள்

எட்டுப்படங்கள் வந்தாலென்ன? எங்கள் வெற்றி நிச்சயம் – தெம்பான ஸ்வீட் ஹார்ட்

வாரந்தோறும் நிறையப் படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. மார்ச் 7 அன்று ஏழு படங்கள் வெளியாகின.அடுத்து மார்ச் 14 அன்று பத்து படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பத்துப் படங்களில் ரவிமோகனின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சும் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்கள் மறுவெளியீடு செய்ய்ப்படுகின்றன.

இவை தவிர, ஸ்வீட் ஹார்ட்,வருணன், பெருசு,ராபர்,கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்,மாடன், குற்றம் குறை, டெக்ஸ்ட்டர் ஆகிய எட்டுப்படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கின்றன.

எட்டுப்படங்கள் வெளிவரும் என்று சொல்லப்பட்டாலும் எத்தனை படங்கள் வெளியாகும் என்பது மார்ச் 14 அன்று தான் உறுதியாகத் தெரியும்.

ஆனால், இவ்வளவு படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும்போதும் தெம்பாகக் களமிறங்குகிறது ஒரு படக்குழு.

ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ‘ஸ்வீட் ஹார்ட்’. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரொமான்டிக் காமெடி படமான இதைத் தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார்.

இப்படக்குழுதான் மிகவும் தெம்பாக திரையரங்குகள் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

படம் வெளிவருமுன்பே நல்ல விலைக்கு இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகள் வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கிறார் ஃபைவ்ஸ்டார் செந்தில்.

அண்டை மாநில உரிமைகள் மற்றும் வெளிநாட்டு உரிமை ஆகியனவும் விற்பனை ஆகியிருக்கிறது.

எல்லோருமே படம் பார்த்து நன்றாக இருக்கிறது என்பதால் வியாபாரம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்துக்கு தமிழ்நாட்டில் சுமார் 280 முதல் 300 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஆகியன இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதும் உடன் வெளியாகும் படங்கள் இந்தப்படத்துடன் போட்டி போடும் அளவுக்கு இல்லை என்றும் சொல்லப்படுவதால் திரையரங்குக் காரர்களும் இந்தப்படத்தைத் திரையிடுவதற்கு முன்னுரிமை தருகிறார்களாம்.

இதனால் இப்படத்தைத் தயாரித்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நாயகனாக நடித்திருக்கும் ரியோராஜ் ஆகியோர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Related Posts