சூர்யா 44 படப்பிடிப்பு விவரங்கள்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்கிற படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அதைக் காலவரையின்றித் தள்ளி வைப்பதாக அறிவித்துவிட்டார்கள்.மார்ச் 18 ஆம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது.
அடுத்த பத்தே நாட்களில் அதாவது மார்ச் 28 அன்று, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்,அந்தப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.அது சூர்யாவின் 44 ஆவது படம்.
அதைத் தொடர்ந்து மே 15 அன்று இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை.
இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பு நாட்கள் இடங்கள் ஆகியனவற்றை மொத்தமாக இறுதி செய்துவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பவிருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. அந்தமான் தீவுகளில் தொடங்கும் படப்பிடிப்பு ஜூலை 3 ஆம் தேதி வரை நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
அந்தமானில் இப்படத்தின் படப்பிடிப்புக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கான போக்குவரத்தே மிகவும் கஷ்டமாக இருக்கும் என்கிறார்கள்.
அங்கு கேரவன் வசதியும் இல்லையாம்.ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் சூர்யா உள்ளிட்டோர் ஆர்வமாகக் கிளம்பக் காரணம் அந்த இடங்கள்தாம். இதுவரை திரைப்படங்களில் வராத மாதிரியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.
அங்கு உள்ள சில தீவுகள் மற்றும் கடலிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அந்தமானில் தொடங்கவிருக்கும் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த கையோடு ஊட்டி மற்றும் கேரளாவில் அடுத்தடுத்த கட்டப் படப்பிடிப்புகளைத் தொடரவிருக்கிறார்களாம்.
இப்படத்துக்கு அடுத்து ஓர் இந்திப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. அதனால் இப்படத்தின் படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டு அங்கு செல்வது என்று திட்டமிட்டிருக்கிறாராம்.
அவர் நினைத்தபடி எல்லாம் சரியாக நடந்தால் இந்தப்படத்தை முடித்துவிட்டு இந்திப்படத்துக்குப் போவார்.இல்லையெனில் இரண்டு படங்களுக்கும் மாறி மாறி தேதிகள் தருவாராம் சூர்யா.
அப்படி ஒரு நிலை வராமல் மொத்தப் படப்பிடிப்பையும் வேகமாக முடித்துவிடுவோம் என்று நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறது படக்குழு.











