September 7, 2024
சினிமா செய்திகள்

துணிச்சலாக நின்று வென்ற சுந்தர்.சி – அரண்மனை 4 வியாபார விவரம்

பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Benzz Media PVT LTD) சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினி மேக்ஸ் (Avni Cinemax (P) Ltd) சார்பில் குஷ்பு சுந்தர் ஆகியோர் தயாரித்துள்ள அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர்.சி.

இப்படத்தில் சுந்தர் சி யுடன், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி,விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், எஸ்.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மே 3 ஆம் தேதி வெளியான இந்தப்படம் முதல்நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்தது. வசூலும் சிறப்பாக இருந்தது.

இந்நிலையில்,இப்படம் நூறு கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதோடு இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வும் படக்குழுவினருக்கு நடந்துள்ளது.

அது என்ன?

இந்தப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாகவே இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை விற்க முயன்றனர்.

ஆனால், அப்போது எல்லா நிறுவனங்களுமே மிகக் குறைந்த விலைக்குப் படத்தைக் கேட்டுள்ளனர்.அதனால் படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகு விற்பனை செய்துகொள்கிறேன் என்கிற துணிச்சலான முடிவை எடுத்தார் சுந்தர்.சி.

அவருடைய துணிச்சலைக் கேலி பேசியவர் பலருண்டு. ஆனாலும் விடாப்பிடியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் சுந்தர்.சி.

படம் வெளியான பின்பு படத்தைப் பார்த்த உதயநிதி, இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை மட்டும் கலைஞர் தொலைக்காட்சிக்காக வாங்க நினைத்தாராம்.அதற்காக அவர் கொடுக்க ஒப்புக்கொண்ட தொகை சுமார் ஒன்பது கோடி என்று சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை மட்டும் கொடுத்துவிட்டால் இணைய ஒளிபரப்பு உரிமைக்கு வேறொரு நிறுவனத்தை நாட வேண்டுமே என்று தயங்கி நின்ற போது, இரண்டையும் சேர்த்து யாராவது வாங்கிக் கொள்வதென்றால் கொடுத்துவிடுங்கள் என்று உதயநிதி கூறிவிட்டாராம்.

ஏற்கெனவே இப்படத்தை வாங்க பேச்சுவார்த்தையில் இருந்த ஹாட்ஸ்டார் நிறுவனம்,உதயநிதி படம் பார்த்து வாங்க ஒப்புக்கொண்டார் என்று தெர்ந்ததுமே ஏற்கெனவே கொடுப்பதாகச் சொன்ன தொகையைவிட இரண்டு கோடி அதிகம் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம்.

இப்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமை ஆகிய இரண்டும் சேர்த்து சுமார் பதினான்கு கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

வெளியீட்டுக்கு முன்பு சுமார் நான்கு கோடி கொடுப்போம் என்று சொல்லிக்கொண்டிருந்த ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்போது பதினான்கு கோடிக்கு வாங்குகிறது.

படத்தின் மீதான நம்பிக்கையால் காத்திருந்த சுந்தர்.சிக்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.

Related Posts