வணங்கான் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றார் சுரேஷ்காமாட்சி
நடிகராக அறியப்பட்ட அருவிமதன் இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கியுள்ள படம் நூடுல்ஸ். ஷீலா ராஜ்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப்படத்தை அருண் பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கூறியிருப்பதாவது….
நிறைய நண்பர்கள் மாநாடு படத்திற்குப் பிறகு நீங்கள் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தலாமே? எனக் கேள்வி கேட்டதுண்டு.
சிலருக்கு சினிமா மோகம். சிலருக்கு சினிமா தாகம்.
நமக்குக் கொஞ்சம் தாகம் அதிகம். முரண்களைப் பார்த்தே வளர்ந்துவிட்டதால் முரண்களில் பயணப்படுவது பிடிக்கும்.
ஏழு கடல் ஏழு மலை, ராஜாகிளி, உயிர் தமிழுக்கு, வணங்கான் என பெரிய படங்களுக்கு நடுவே நூடுல்ஸ் என்ற சமூகப் பொறுப்புள்ள ஒரு படத்தின் மீதும் கண் விழுந்தது.
நிச்சயம் பார்ப்பவர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கை வந்த பிறகே படத்தின் மீது கைவைத்தேன்.
இயக்கம், நடிப்பு என எல்லாப் பக்கமும் கைதேர்ந்து படைத்திருக்கிறார்கள் இந்த நூடுல்ஸை.
சிறிய படம்… சின்ன நடிகர்கள் என்பதை மீறி இப்படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மிக மிக அவசரம் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போன்ற தாக்கத்தை இப்படமும் ஏற்படுத்தும் என வலுவாய் நம்புகிறேன்.
பெரும் படங்களின் மார்க்கெட்டிங் கப்பல்களுக்கு நடுவே இந்த கிழித்துச் செல்லும் படகையும் களம் காண வைக்கிறோம்.
உங்கள் பேராதரவு எனும் காற்று வீசி எங்கள் படகை கரை சேர்ப்பீர்கள் எனும் பெரும் நம்பிக்கையுடன் செப்டம்பர் 8 இல் திரைவருகிறோம்.
ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள். நன்றி
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நூடுல்ஸ் படம் குறித்த இந்த அறிவிப்பில் அவர் இன்னொரு செய்தியையும் சொல்லியிருக்கிறார்.
அது என்னவெனில், பாலா இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் வணங்கான் படத்தின் தயாரிப்புப் பொறுப்பையும் அவர் ஏற்றிருக்கிறார் என்பதுதான்.
அவர் தயாரிக்கும் ஏழுகடல் ஏழுமலை, ராஜாகிளி,வெளியிடும் உயிர்தமிழுக்கு ஆகிய படங்களின் வரிசையில் வணங்கான் படமும் சேர்ந்திருக்கிறது.
ஏற்கெனவே திரையுலகில் இந்தத் தகவல் உலவியது. அதை சுரேஷ்காமாட்சி உறுதிப்படுத்தியிருக்கிறார்.










