சினிமா செய்திகள்

போயஸ்கார்டனில் இயக்குநர் சுதாகொங்கரா – வியப்பில் திரையுலகம்

2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் சுதாகொங்கரா.

அப்படம் ஓடாததால் அடுத்த படம் எடுக்கப் பெரும் இடைவெளி. 2016 ஆம் ஆண்டு அவருடைய அடுத்த படமான இறுதிச்சுற்று வெளியானது. பெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து அந்தப்படத்தையே இந்தியில் எடுத்தார்.

அவற்றிற்குப்பின் அவருடைய தாய்மொழியான தெலுங்கில் ஒரு படம் இயக்கினார்.அது 2017 இல் வெளியானது.அதற்குப் பெரிய அளவில் வரவேற்பில்லை.

ஆனால், 2020 இல் வெளியான சூரரைப்போற்று படம் அவரைப் பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அப்படத்தின் வெற்றி காரணமாக அக்‌ஷய்குமாரை வைத்து இந்தியில் சூரரைப்போற்று படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

அதற்கடுத்து, கேஜிஎஃப் படத்தைத் தயாரித்துப் புகழ்பெற்றிருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவிருக்கிறார்.

இந்தி சூரரைப்போற்று படத்துக்கு அவருடைய சம்பளம் சுமார் பதினைந்து கோடி என்று சொல்லப்படுகிறது. அதன்பின் ஹொம்பாலே ஃபிலிம்ஸுக்கு அவர் இயக்கும் படத்துக்குச் சம்பளம் சுமார் 25 கோடி என்று சொல்லப்படுகிறது.

நான்கே படங்கள் இயக்கிய சுதாகொங்கரா பெறும் இவ்வளவு பெரிய சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இவ்வளவு பெரிய சம்பளம் கிடைத்திருப்பதால் சென்னையின் போயஸ்தோட்டம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு அருகில் ஒரு பெரியவீடு வாங்கியிருக்கிறாராம் சுதாகொங்கரா. அதன் மதிப்பு சுமார் பத்துகோடி என்று சொல்லப்படுகிறது.

Related Posts