கவினின் ஸ்டார் வெளியீட்டுத் தேதி முடிவானது

லிஃப்ட்,டாடா ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அப்படங்களின் நாயகன் கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.ஏப்ரல் 4 அன்று, கபிலன் இயற்றி யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துப் பாடியிருந்த இருவிழிப்பாதையில் காத்திருந்தேன் எனத் தொடங்கும் காதல் பாடல் வெளியானது.அப்பாடல் இளைஞர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஸ்டார் படத்தை பிப்ரவரி 14,2014 காதலர் தினத்தன்று வெளியிட்டுவிடவேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்துவந்தார்கள்.ஆனால் நடக்கவில்லை.
அதன்பின், ஏப்ரல் 12 ஆம் தேதி படத்தை வெளியிட்டுவிடத் திட்டமிட்டார்கள்.அதுவும் நடக்கவில்லை.
இப்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை இறுதி செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
மூன்றாம் முறை திட்டமிடப்பட்டுள்ள வெளியீட்டுத் தேதி, மே மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை.அந்நாளில் இப்படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.
அந்தத் தேதியில், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தேர்தல் பரபரப்புகள் முடிந்திருக்கும்.பள்ளிகள் விடுமுறை தொடங்கியிருக்கும். இந்த அமசங்களைக் கணக்கில் கொண்டே அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதோடு, இப்படத்தைத் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் பொறுப்பை ரெட்ஜெயண்ட் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறதாம்.
இதற்கு முன்பாக படம் பார்த்தவர்கள், படம் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள்.அதை உறுதிப்படுத்தும் விதமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றிருக்கிறது.
படத்தின் முதல்பார்வை மற்றும் பாடல்கள் ஆகியனவற்றிற்கு இரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பால் உற்சாகமடைந்திருந்த படக்குழுவுக்கு ரெட்ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிட ஒப்புக்கொண்டது இன்னும் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறதாம்.
ஏனெனில், திரையுலக வட்டாரத்தில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு படத்தை வெளியிட ஒப்புக்கொண்டாலே அப்படம் பாதி வெற்றி அடைந்த மாதிரிதான் என்று சொல்வார்கள்.வெளியீட்டுக்கு முன்பே அந்த வெற்றியை ருசித்திருப்பதாலே கூடுதல் உற்சாகமடைந்திருக்கிறது படக்குழு.