லியோவைவிட விலை குறைவு – தி கோட் வியாபார அதிர்ச்சி
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அக்டோபர் 2,2023 அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
படத்தின் முதல்பார்வை, இரண்டாம்பார்வை மற்றும் மூன்றாம் பார்வை ஆகியன வெளியிடப்பட்டிருக்கின்றன.இப்போது செப்டம்பர் 5,2024 அன்று படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டுத்தேதியை அறிவித்துவிட்டார்கள் என்பதால் இப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிவடைந்துவிட்டதா?
விஜய்யின் முந்தைய படமான லியோ, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் எண்பது கோடிக்கும் இணைய உரிமை சுமார் நூற்றிருபது கோடிக்கும் விற்பனை ஆனதென்கிறார்கள்.
அதேபோல், லியோ படத்தின் எஃப் எம் எஸ் எனப்படும் வெளிநாட்டு விநியோக உரிமை சுமார் அறுபது கோடிக்கு விற்பனை ஆனதாம்.
இதனால் அந்தப்படத்தை விடக் கூடுதல் விலைக்குக் கொடுக்கவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைத்ததாம். ஆனால், நிறுவனம் நினைத்தபடி நடக்கவில்லை என்கிறார்கள்.
இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை சுமார் தொண்ணூறு கோடிக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் ஐம்பது கோடிக்கும் விற்பனை ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதன்படி இணைய ஒளிபரப்பு உரிமை லியோ படத்தைவிட சுமார் முப்பது கோடி குறைவாகவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் சுமார் முப்பதுகோடி குறைவாகவும் விற்பனை ஆகியிருக்கிறதென்கிறார்கள்.
அதேபோல்,லியோ படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் அறுபது கோடிக்கு விற்பனையானதாகச் சொல்லப்பட்டது.இந்தப்படம் அதைவிடச் சுமார் பதினைந்து கோடி குறைவாக அதாவது சுமார் நாற்பத்தைந்து கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் நாயகன் விஜய்க்கு லியோ படத்தைவிட இந்தப்படத்தில் சம்பளம் அதிகம்.லியோவைவிட சுமார் பதினைந்து கோடி அதிகச் சம்பளம் என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் லியோ படத்தின் வியாபாரத்தைவிட குறைவான விலைக்கு இப்படம் வியாபாரமாகியிருப்பது சோகமான நகைமுரண்.