முன்பின் தெரியாதவருக்காக பிரார்த்தனை செய்த சிம்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாக உள்ளது. சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50) ஏப்ரல் 13 அன்று காலை தீக்குளித்தார்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலன் தராமல் சரவண சுரேஷ் ஏப்ரல் 14 அன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாலை 6 மணி அளவில் கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது….
சரவண சுரேஷ் உயிர் பிரிவதற்குப் பத்து நிமிடம் முன்பு ஸ்டாலின் என்னிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
நான் இதற்கு முன் பேசிப் பழகியிராத நடிகர் சிம்பு போனிலேயே கதறி அழுதார். தீக்குளித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து இரவெல்லாம் இறைவனைப் பிரார்த்தித்தேன் என்று அவர் கதறி அழுதார்.
எனக்கும் சிம்புவுக்கும் முன்பின் பழக்கம் கிடையாது. அவரது மனிதாபிமானத்திற்கு நான் நன்றி தெரிவித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டவாறு சரவண சுரேஷ் உயிரிழந்திருக்கிறார். நான் சொல்கிறேன் நரேந்திர மோடி அரசு எந்த நாளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நான் சொல்கிறேன் எக்காலத்திலும் அமைக்காது
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
சிம்புவின் மனிதாபிமான உணர்வு பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.











