விஜய் 66 பட பூசைக்கு சரத்குமார் வந்தது எதனால்?
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் நேற்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.
இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் நேற்று விமரிசையான பூசையுடன் ஆரம்பமாகி உள்ளது.நேற்றே படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.
இந்தப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மேற்கொள்ள இருக்கிறார்.
இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி விஜய்க்காக முதன்முறையாக ஒரு புதிய கதையை புத்திசாலித்தனமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளார் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தின் தொடக்கவிழாவில் நடிகர் சரத்குமாரும் கலந்துகொண்டார். அவர் ஏன் இப்பட பூசையில் கலந்துகொண்டார்?
ஏனென்றால் இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் அவர் நடிக்கவிருக்கிறாராம். அதாவது படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சரத்குமார், தெலுங்கில் ஓர் இணையத் தொடரில் நடித்திருந்தாராம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.
அதனால் இந்தப்படத்தில் அவரை வில்லனாக்கினால் படத்துக்கு நல்ல கவனம் கிடைக்கும் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.











