Uncategorized சினிமா செய்திகள்

கமல் சிகா இணைந்து நடிக்கும் சேயோன் படப்பிடிப்பு எப்போது? – புதியதகவல்

சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார்.
இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்குப் பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

கிராமிய பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடிக் காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் இரசிக்கும்படியான படமாக சேயோன் உருவாகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூறியிருப்பதாவது….

விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களைப் பற்றிய படம்தான் ‘சேயோன்’.இப்படம் யாருக்கும் எதிராகவோ,சாதமாகவோ இருக்காது.அனைத்துத் தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் விருமாண்டி மற்றும் முருகர் ஆகிய இரண்டு தெய்வங்களைப் பற்றிய படம் என்று சொல்லியிருக்கிறார்.அதன்படி முருகராக சிவகார்த்திகேயனைச் சித்தரித்துவிட்டு விருமாண்டியாக கமல்ஹாசனைச் சித்தரிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தின் திரைக்கதையில் இருக்கும் விருமாண்டி கதாபாத்திரத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் காரணமாகவும் படத்தின் வியாபாரம் பன்மடங்கு பெருகும் என்கிற காரணத்துக்காகவும் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டாராம்.

சேயோன் பட அறிவிப்பு வெளியானபோதே, இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் இறுதியில் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள்.அதன்படி மார்ச் 27 முதல் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டார்கள்.ஆனால்,சில காரணங்களால் நினைத்தபடி தொடங்கவில்லை.

இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

படப்பிடிப்பு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தவேண்டியிருக்கிறது.பல இடங்களில் வெளிப்புறப்படப்பிடிப்பும் இருக்கிறதாம்.

இப்போது தேர்தல் பரப்புரைகள் நடந்துகொண்டிருப்பதால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படலாம் என்பதால், தேர்தல் முடிந்த பின்பு படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள்.

அனேகமாக, ஏப்ரல் 27 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குமென்று சொல்லப்படுகிறது.

அந்த நெருக்கத்தில் இன்னும் ஒருவாரத்தில் தேர்தல்முடிவு வரவிருக்கிறது.அதுவும் வந்தபின் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று முடிவெடுத்தாலும் எடுக்கலாம் எனும் நிலை.

அதற்குள், படத்தில் நடிக்க வேண்டிய மற்ற நடிகர்,நடிகைகள் குறித்தும் இறுதிசெய்யப்பட்டுவிடும் என்கிறார்கள்.

Related Posts