சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்கு வந்துள்ள திடீர் சிக்கல்

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.

இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் தொடங்கியது.

அதன்பின், இயக்குநர் நார்தன் விலகிக் கொள்ள சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் தொடரும் எனவும் அப்படத்துக்கு பத்துதல என்று பெயர் வைத்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அப்படத்துக்கு திடீர் சிக்கல் வந்துள்ளது.

பொதுவாக ஒரு படத்தை மொழிமாற்றும் உரிமை பெற்றுவிட்டால் அப்படத்தின் குரல்மாற்று (டப்பிங்) உரிமை கொடுக்கமாட்டார்கள்.

ஆனால், முஃப்தி படத்தின் தமிழ்மொழிமாற்று தயாரிப்பில் இருக்கும்போதே அப்படத்தைத் தமிழில் குரல்மாற்று (டப்பிங்) செய்து கலர்ஸ்தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார்கள்.

அத்தொலைக்காட்சி ஒரு படத்தின் உரிமையை வாங்கினால் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கும். அப்படிச் செய்யும்போது இயல்பாகவே பத்துதல படத்துக்கான எதிர்பார்ப்பு குறைந்துவிடும், இதனால் அப்படத்தை வியாபாரம் செய்வதும் கடினமாக இருக்கும்.

இப்போது என்ன செய்யப் போகிறார்களோ?

Related Posts