ரஜினிக்காகப் பெய்த வெந்நீர் மழை – கூலி படப்பிடிப்பு தடைபட்ட காரணம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் நடந்தது.
தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்தப் படப்பிடிப்பு சுமார் 50 நாட்கள் வரை திட்டமிடப்பட்டது.
ஆனால் அங்கு தற்போது பெயது வரும் தொடர் மழை காரணமாக இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே சென்னை திரும்பி விட்டார்கள்.
படப்பிடிப்பு உபகரணங்கள்,வாகனங்கள் ஆகிய அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.மழை பாதிப்புகள் சரியானதும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலேயே தொடங்கும் என்று படக்குழு சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
இது வெளிப்படையாகச் சொன்ன காரணம்.ஆனால் படப்பிடிப்பு இரத்தாக இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறதென்கிறார்கள்.
அது என்ன?
விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில், ரஜினிகாந்த் மழையில் நனைந்து கொண்டே நடிப்பது போன்ற காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள்.ஒரு நாள் முழுக்க செயற்கை மழை நீரில் நனைந்து கொண்டே நடித்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாம்.
அதனால் சாதாரண நீருக்குப் பதிலாக வெந்நீர் பயன்படுத்துங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருக்கிறார்.அதற்காக சென்னையிலிருந்து வெந்நீர் சென்றிருக்கிறது.
ரஜினிகாந்த்துக்காகப் பெய்ய வைக்கப்பட்ட வெந்நீர் மழையில் நனைந்து கொண்டே நடித்திருக்கிறார்.ஆனால், அதுவும் அவருக்கு ஒத்து வராமல் உடல் உபாதை அதிகமாகிவிட்டதாம்.அவர் சிரமப்படுவதை படக்குழு நன்றாக உணர்ந்துள்ளது.
அதனால்,உடனடியாகப் படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டார்களாம்.
ஏனெனில் அங்கு படமாக்கப்படவிருந்த காட்சிகள் அனைத்தும் அவரைச் சுற்றியே நடப்பது போலத் திட்டமிட்டப்பட்டிருக்கிறது.அதனால் அவர் இல்லாமல் அங்கு படப்பிடிப்பைத் தொடர முடியாது என்கிற நிலை.
ஆகவே, அவர் உடல்நலம் தேறிய பின்பு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அனைவரும் சென்னை திரும்பிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தில் நடிக்கும் அனைவருமே தொடர்ச்சியாகப் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள்.அவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதற்குச் சற்றுக் காலதாமதம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.அதனால் மீண்டும் அங்கு படப்பிடிப்பு தொடங்க சில வாரங்கள் வரை ஆகலாம் என்று சொல்கிறார்கள்.