சினிமா செய்திகள்

உதயநிதிக்குப் பதிலாக சமுத்திரக்கனி – நந்தன் படத்தில் மாற்றம்

கத்துக்குட்டி,உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’.

இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் முதல்பார்வையை டிசம்பர் 1 அன்று உதயநிதிஸ்டாலின் வெளியிட்டார்.அதில் இதுவரை பார்த்திராத சசிகுமாரின் தோற்றம் இரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

இந்தப்படத்தில் ஓர் அரசாங்க அதிகாரி கதாபாத்திரம் உள்ளது. சில காட்சிகளில் மட்டும் வரும் அந்தப்பாத்திரத்தில் நடிக்க உதயநிதியிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் முதலில் ஒப்புக்கொண்டாராம். அதன்பின் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதால் நடிக்கவியலாது என்று சொல்லிவிட்டாராம். அதனால் முதல்பார்வையை வெளியிடுங்கள் என்று அவரிடம் கேட்க அவரும் வெளியிட்டுவிட்டார்.

உதயநிதியை நடிக்கக் கேட்ட அந்த வேடத்தில் இப்போது நடித்திருப்பது சமுத்திரக்கனி.

Related Posts